Sunday, 8 January 2017

ஏப்ரல் 1 முதல் நவம்பர் 9 வரை வங்கிகளின் டெபாசிட் விவரங்களை கேட்கிறது வருமான வரித்துறை!

கடந்த ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் நவம்பர் 9-ஆம் தேதி வரை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ள சேமிப்பு கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு வங்கிகளுக்கு வருமான வரித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
கருப்பு பணத்தை ஓழிக்கவும், கள்ள நோட்டுகளை அழிக்கும் விதமாகவும் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை பிடிக்கும் விதமாகவும் மற்றும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மேலும் அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் மார்ச் மாதம் வரை கொடுத்து மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நடந்த பல அதிரடி சம்பவங்களைத் தொடர்ந்து கருப்பு பணம் பதுக்கியவர்களின் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம், நகைகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூபாய் நோட்டு செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் டிசம்பர் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4172 கோடி கணக்கில் காட்டப்படாத ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சோதனையில் 550 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 105 கோடி ரூபாய் நோட்டுகள் புதிய நோட்டுகளாகும் என வருமான வரித்துறை தெரிவித்தது.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாதென்று மத்திய அரசின் அறிவித்த நவம்பர் 8-ஆம் தேதிக்கு முன்னதாக, பெரிய அளவில் ரொக்கமாக செய்யப்பட்ட டெபாசிட்களை அறிய வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக பெரிய தொகையை டெபாசிட் செய்தவர்கள் விவரத்தையும் சேகரிக்க முடிவெடுத்துள்ளது.
இதையடுத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு வருமான வரித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கிகள், தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவை அதில் கடந்த 2016 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி வரை வங்கி சேமிப்பு கணக்குகளில் ரூ.2,5 லட்சம் டெபாசிட் செய்தவர்களின் கணக்கு விவரங்களையும் நடப்பு வங்கி கணக்கில் ரூ.12.50 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்களின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதை வங்கிகள் தாக்கல் செய்த பின் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
எனவே, இதற்கான விவரங்களை அளிக்குமாறு வங்கிகளை வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment