தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசினேன். தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இருப்பினும் இப்பிரச்சினையில் மாநில அரசின் முடிவுகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என உறுதியளித்தார்.
பிரதமர் வாக்குறுதியை ஏற்று, நேற்றிரவு டெல்லியில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அந்த ஆலோசனையின்படி மத்திய அரசின் மிருக வதை தடை சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. நேற்றிரவே ஜல்லிக்கட்டு தொடர்பாக வரைவு அவசரச் சட்டம் தயார் செய்யப்பட்டது. இந்த வரைவு அவசரச் சட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பி உள்துறை வாயிலாக குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு ஒப்புதல் பெற்ற பிறகு மாநில ஆளுநர் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவசரச் சட்டத்தை பிறப்பிப்பார்.
சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி தயாரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு வரைவு அவசரச் சட்டம் மத்திய உள்துறைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுப்பப்பட்டுவிட்டது. மத்திய அரசு மாநில அரசின் முடிவுக்கு துணை நிற்கும்.
எனவே, இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என நான் உறுதியளிக்கிறேன். ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறவிருக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களும், மாணவர்களும், பொதுமக்களும் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்"
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
No comments:
Post a Comment