ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நீடித்த நிலையான சட்டம் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது:
''தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தினார். நான் பிரதமரை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
தமிழகம் எடுக்கும் சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார். அதனை ஏற்று உள்துறை, சட்டத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சகங்களின் ஒப்புதல் பெற்று குடியரசுத்தலைவர் ஒப்புதலோடு, தமிழக ஆளுநர் மூலம் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
கூட்டத் தொடர் இல்லாத நேரத்தில் அவசர சட்டம்தான் கொண்டுவர முடியும். ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நீடித்த நிலையான சட்டம்தான். இனி, யாராலும் ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்த முடியாது.
தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. வாடிவாசல்கள் திறக்கப்பட்டுள்ளன. போலீஸார் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். மக்கள் விரும்பும்போது ஜல்லிக்கட்டை நடத்திக் கொள்ளலாம்.
திங்கட்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் சட்டமாக இயற்றப்படும்'' என்று முதல்வர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment