2016-2017-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்ட வணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி சென்னையில் நேற்று வெளியிட்டார். இதை செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோ பனா ஆகியோர் பெற்றுக்கொண் டனர். பின்னர் டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டு 33 விதமான பணிகளில் 5,513 காலியிடங்களை நிரப்பும் வகையில் வருடாந்திர தேர்வு காலஅட்டவணையை வெளியிட்டுள்ளோம். எனினும் பல்வேறு துறைகளில் இருந்து இன்னும் காலியிடங்கள் வரும் வாய்ப்பு இருப்பதால் இந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் காலியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக நிரப்பப்படும்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களில் குரூப்-4 பணிகளில் (இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர்) மட்டும் 4,931 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், துணை ஆட்சியர், உதவி வணிக அதிகாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அலுவலர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில் 45 காலியிடங்கள் (குரூப்-1 பணிகள்), 65 உதவி ஜெயிலர் பணியிடங்கள், 172 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட பணிகளும் அறிவிப்பில் இருக்கின்றன.
முதல்முறையாக சுற்றுலா அதிகாரி (5 காலியிடம்) பணியிடமும், அரசுத்துறை நிறுவனமான எல்காட் நிறுவனத்தில் துணை மேலாளர் பணியிடமும் (12 காலியிடம்) டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
கடந்த ஆண்டு வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்று நடத்த முடியாமல் போன தேர்வுகளும் இந்த ஆண்டு அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ளன. வருடாந்திர தேர்வு காலஅட்டவணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அருள்மொழி கூறினார்.