Monday, 25 January 2016

ரஜினிகாந்த், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோருக்கு பத்மவிபூஷண் விருது


நடிகர் ரஜினிகாந்த், ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான மறைந்த திருபாய் அம்பானி உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருதும், ஹிந்தி நடிகர் அனுபம் கெர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலுக்கு பத்ம பூஷண் விருதும், ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலை, இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2016 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. 10 பேருக்கு, பத்ம விபூஷண் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 83 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 19 பேர் பெண்கள். அதன் விவரம் வருமாறு:
பத்ம விபூஷண் விருது: நடிகர் ரஜினிகாந்த், ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானி, ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஈநாடு ஊடக அதிபர் ராமோஜி ராவ், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஜக்மோகன், இந்திய பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் வி.கே.ஆத்ரே, புற்றுநோய் சிகிச்சை நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா, குச்சிபுடி நடனக் கலைஞர் கிரிஜா தேவி, அமெரிக்கவாழ் இந்தியப் பொருளாதார நிபுணர் அவிநாஷ் தீட்சித்.
பத்ம பூஷண் விருது: ஹிந்தி நடிகர் அனுபம் கெர், பாடகர் உதித் நாராயண், மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அமைப்பின் (சிஏஜி) முன்னாள் தலைமை அதிகாரி வினோத் ராய், பென்னட் கால்மேன் குழுமத் (டைம்ஸ் ஆப் இந்தியா) தலைவர் இந்து ஜெயின், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவால்.
ஆன்மிக குருக்கள் சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி தேஜோமயானந்தா, இந்தியாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் ராபர்ட் பிளாக்வில், சிற்பக் கலைஞர் ராம் வி. சுதார், மணிப்பூர் மாநில நாடகக் கலைஞர் ஹெஸ்நாம் கன்னையாலால், ஹிந்தி, தெலுங்கு மொழி எழுத்தாளர் யாலகட்டா லட்சுமி பிரசாத்.
சம்ஸ்கிருத அறிஞர் என்.எஸ். ராமானுஜ தாத்தாசார்யா, பஞ்சாப் செய்தியாளர் பர்ஜிந்தர் சிங் ஹம்தர்த், இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் டி. நாகேஸ்வர ரெட்டி, விஞ்ஞானி ஏ.வி.ராமா ராவ், தொழிலதிபர் பலோன்ஜி சபூர்ஜி மிஸ்திரி, மாருதி சுசூகி நிறுவனத் தலைவர் ஆர்.சி.பார்கவா, கட்டடக் கலை நிபுணர் ஹஃபீஸ் கான்டிராக்டர.
பத்ம ஸ்ரீ விருது: மும்பை தாக்குதல் வழக்கில் திறம்பட வாதாடிய அரசு வழக்குரைஞர் உஜ்வல் நிகம், ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா, மறைந்த நடிகர் சயீது ஜாஃப்ரி, மாஸ்டர் கார்டு நிறுவனத் தலைமை செயல் அதிகாரி அஜய்பால் சிங் பங்கா.
வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, பரதநாட்டியக் கலைஞர் பிரதிபா பிரகலாத், குஜராத்தி மொழி நாட்டுப்புற இசைக் கலைஞர் பிகுதான் காத்வி, கோவா இசைக் கலைஞர் துளசிதாஸ் போர்கர், விஞ்ஞானி ஓங்கார்நாத் ஸ்ரீ வாஸ்தவா.

No comments:

Post a Comment