வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016-ன் இறுதி வாக்காளர் பட்டியல்கள் இன்று (20.01.2016) வெளியிடப்பட்டது. இதன்படி தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.79 கோடியாகும்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016-ன் இறுதி வாக்காளர் பட்டியல்கள் இன்று (20.01.2016) வெளியிடப்பட்டது.
இதன்படி, தமிழ்நாட்டில் தற்போது 5.79 கோடி வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் – 2.88 கோடி, பெண் வாக்காளர்கள் – 2.91 கோடி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 4383) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016-இல் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிகர வாக்காளர்களின் எண்ணிக்கை 12.33 இலட்சம் ஆகும். விண்ணப்பிக்கும்போது தங்கள் கைபேசி எண்ணை அளித்த சுமார் எட்டு லட்சம் வாக்காளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகின்றது.
புதிய வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. இவை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 10.02.2016 வாக்கில் வழங்கப்படும்.
அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி:
மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி, தமிழ்நாட்டிலேயே அதிக அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள 27.சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 5,75,773 பேர் ஆவர். (ஆண்கள் 2,91,909, பெண்கள் 2,83,819, மூன்றாம் பாலினத்தவர் 45. 18-19 வயதுடைய இளைய வாக்காளர்களும் (12,797 பேர்) இத்தொகுதியில்தான் அதிகமாக உள்ளனர் (ஆண்கள் 7214 , பெண்கள் 5583).
குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி:
தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 164. கீழ்வேளூர் (தனி) சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,63,189 பேர் ஆவர். (ஆண்கள் 81,038, பெண்கள் 82,151).
பணித்தொகுதி வாக்காளர் அதிகமுள்ள சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்திலுள்ள 196. திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியாகும் (2402 பேர்). வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 47 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. தகுதியுள்ள எவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமலிருந்தால், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தின் மூலமாக இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment