Monday 11 January 2016

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்



வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி கூறியுள்ளார்.

உதவித்தொகை

திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தவறியவர்களுக்கு மாதம் ரூ.100-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.200-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 10-ம் வகுப்பு வரை படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.300-ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.375-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.450-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

விதிமுறைகள்

இந்த உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2015-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது. தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலை வாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருத்தல் கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.

தகுதி உடையவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களுடன் அடுத்த மாதம் (பிப்ரவரி) 29-ந் தேதிக்குள் அலுவலக வேலை நாளில் திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment