விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு அதிகபட்ச கால அவகாசம் 49 நாட்களாக இருந்தது. 2014-ல் 42 நாட்களாகவும் 2015-ல் 21 நாட்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதற்கான நோட்டரி அபிடவிட், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் எண் அட்டை ஆகிய 4 ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பாஸ்போர்ட் பெறலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் வழங்கிய பிறகு வழக்கமான போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய நடைமுறை குறித்து சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ராகேஷ் அகர்வால் கூறியபோது, இனிமேல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். ஒருவேளை ஆதார்- வாக்காளர்- பான் அடையாள அட்டைகள் இல்லை என்றால் வழக்கமான போலீஸ் விசாரணை நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.