திருவாரூர் நகராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன தகன எரிவாயு மேடை இதுவரை பயன்பாட்டுக்கு வராததால், இந்த இடம் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.
திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்நகரில் தஞ்சை மெயின் ரோடு, நெய்விளக்கு தோப்பு பகுதியில் என 2 இடங்களில் சுடுகாடு உள்ளது.
இதில் நெய்விளக்கு தோப்பு பகுதியில் தான் நகரில் இறப்பவர்களில் 70 சதவீதம் பேரின் உடல் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில்கொண்டு தமிழக அரசின் உத்தரவால் நவீன தகன எரிவாயு மேடை ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் நெய்விளக்கு தோப்பு பகுதியில் கட்டப்பட்டது.
ஆனால், இன்றுவரை அந்த தகன எரிவாயு மேடை திறக்கப்படாததால், அந்த இடம் சமூக விரோதிகளின் புகலிடமாகியுள்ளது. அங்குள்ள பொருட்கள் பல திருடுபோய்விட்டன. மேலும், பல பொருட்கள் துருப்பிடித்து வீணாகிவிட்டன. இப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள மேற்கூரையுடன் கூடிய திறந்தவெளி மயானத்தில் சடலங்களை எரியூட்டும்போது கிளம்பும் புகையால் இப்பகுதியில் குடியிருக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினமும் பாதிக்கப்படுகின்றனர்.
புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்பு ஏற்படுவதால் உடனடியாக எரிவாயு தகன மேடையைச் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, பல ஆண்டுகளாக திறக்கப்பட்டாமல் உள்ள நவீன தகன மேடையை திறக்கவும், பழுதான பொருட்களைச் சீரமைக்கவும் தொண்டு நிறுவனம் மூலம் பராமரிக்க தற்போது நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment