Thursday 28 February 2019

#திருவாரூர் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது





காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்:திருவாரூர் புதிய பஸ்நிலையம் பயன்பாட்டிற்கு வந்ததுகலெக்டர் ஆனந்த் குத்துவிளக்கேற்றினார்

திருவாரூர் மாவட்டத்தின் தலைநகராக இருந்து போதிய வசதிகள் இன்றி பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. மக்கள் தொகை பெருக்கம், வாகன போக்குவரத்து அதிகரிப்பு காரணங்களால் பிரதான சாலையில் இருந்த பஸ் நிலையம் நெரிசலில் சிக்கி தவித்தது. இதனையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு திருவாரூர் விளமலில் புதிய பஸ் நிலையத்திற்கு 11.08 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 2013-ம் ஆண்டு பஸ் நிலையம் கட்டுமானம் தொடங்கி கடந்த 6 ஆண்டு களாக நடைபெற்று நிறைவு பெற்றது.


இதனையடுத்து புதிய பஸ் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பிலான திருவாரூர் புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் குத்துவிளக்கேற்றி வைத்தார். புதிய பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வரப்பட்டது.


இந்த பஸ் நிலையமானது 35 பஸ் நிறுத்தங்கள், 60 வணிக கடைகள், 2 உணவகங்கள், ஒரு பயணியர் காத்திருப்பு அறை, காவலர் கட்டுப்பாட்டு அறை, நேரகட்டுப்பாட்டு அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் அறை, கழிவறைகள் போன்ற அனைத்து வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் மூலம் தினசரி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்பெறுவார்கள் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.

No comments:

Post a Comment