Wednesday, 20 February 2019

#நாடாளுமன்றதேர்தல்2019 -அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு

இதனால் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது, வேட்பாளர் தேர்வு போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்று உள்ளன. கிட்டத்தட்ட தி.மு.க. தனது அணியை இறுதி செய்து விட்ட நிலையில், அ.தி.மு.க. அணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., பாரதீய ஜனதா, த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தமிழக பாரதீய ஜனதா கூட்டணி பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வந்து அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

அ.தி.மு.க. பக்கம் சாய்ந்த பா.ம.க.

இதைத்தொடர்ந்து பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியது.

பா.ம.க.வுடன் அ.தி.மு.க. தரப்பில் முக்கிய நிர்வாகிகளும், தி.மு.க. தரப்பில் துரைமுருகனும், கனிமொழி எம்.பி. யும் மாறி, மாறி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததால், பா.ம.க. எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த பரபரப்பான சூழ் நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை, தியாகராயநகரில் உள்ள அன்புமணி ராமதாஸ் இல்லத்தில் அமைச்சர் தங்கமணி நேற்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணி ஏற்படுவது உறுதியானது.

அ.தி.மு.க. கூட்டணியில் சேரவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து, கூட்டணியை உறுதி செய்யவும் டாக்டர் ராமதாஸ் விருப்பம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பொதுவான இடத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவரங்களை உறுதி செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் இரு தரப்பு தலைவர்களும் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

டாக்டர் ராமதாஸ்

அதன்படி நேற்று காலை 10.20 மணிக்கு அந்த ஓட்டலுக்கு முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும், ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் வந்தனர்.

அவர்களை தொடர்ந்து 10.28 மணிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, வரவேற்றனர். பின்னர் அவர்கள் தனி அறையில் சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள்

பா.ம.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள், எண்ணிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பா.ம.க.வுக்கு 7 இடங்களும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதைத்தொடர்ந்து கூட்டணி உடன்பாடு தொடர்பான அறிக்கை உடனடியாக வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இடைத்தேர்தலில் ஆதரவு

நடைபெற உள்ள 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ம.க. வும் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பா.ம.க.வுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. 2019-ம் ஆண்டில் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் 21 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பா.ம.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து அவர் கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது, அ.தி.மு.க- பா.ம.க. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவரங்கள் குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

நல்ல முடிவு

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் இணைந்து மெகா கூட்டணியாக, வெற்றி கூட்டணியாக ஒரு கூட்டணி அமைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலை சந்திப்பது என்று ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கும் பா.ம.க. முழு ஆதரவு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது என்ற நல்ல செய்தியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான நானும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோரும் இணைந்து ஏகமனதாக இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்

பா.ம.க.வை தொடர்ந்து மத்திய மந்திரியும், தமிழக பா.ஜனதா கூட்டணி பொறுப்பாளருமான பியூஸ் கோயல், மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் அந்த ஓட்டலுக்கு வந்தனர். தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன், அவர்கள் அ.தி.மு.க-பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீட்டு குறித்து 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

பகல் 2.30 மணிக்கு தொடங்கி, மாலை 4.45 மணி வரை நீண்ட நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற் கான ஒப்பந்தத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தே.மு.தி.க.வுடன் இழுபறி

அதன்பிறகு, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் நேற்று மாலை ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுவதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

விஜயகாந்தை சந்தித்து பேசிய பின் பியூஸ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், விஜயகாந்த் தனது பழைய நண்பர் என்றும், அவரிடம் உடல்நலம் விசாரிக்க வந்ததாகவும் கூறினார்.

புதிய தமிழகம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் என மொத்தம் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு அதிகாரபூர்வமாக முடிந்த பிறகு, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment