Wednesday, 7 March 2018

திருவாரூர் கடை வீதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

திருவாரூர், மாவட்டத்தின் தலைநகராக இருந்த போதிலும் நகரில் தேரோடும் 4 வீதிகளை தவிர அனைத்து சாலைகளும் மிக குறுகலாக உள்ளன. இதில் கடைவீதி எந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர். கடை வியாபாரிகள், தங்கள் எல்லை தாண்டி சாலை வரை கடைகளை விரிவுப்படுத்தியுள்ளதாலும், நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களாலும் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். கடைவீதி உள்ளே கனரக வாகனம் செல்வதற்கு உரிய கால நேரத்தை போலீசார் நிர்ணயித்து அறிவிப்பு செய்துள்ளனர். ஆனால் இந்த விதிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை. எந்த நேரத்திலும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனை தடுக்க வேண்டிய போலீசார் ஆர்வம் காட்டுவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தால் மட்டுமே போலீசார் வருவது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக கடைவீதியில் வாகனம் நிறுத்துவதற்கு என்று இடவசதி இல்லாமல் உள்ளது.

இதனால் கடை வாசலில் வாகனங்களை நிறுத்த வேண்டும். கடைக்காரர்கள் கடையை விரிவுப்படுத்தியது, வழிமுறை படுத்த முடியாத சாலையோர கடைகள் போன்ற காரணங்களால் வாகனங்களை நிறுத்த முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. இதே போல பிரதான சாலையாக உள்ள பனகல் சாலை நிமிடத்திற்கு, நிமிடம் வாகன நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இந்த பாதையை ஒரு வழி பாதையாக மாற்றினால் தான் போக்குவரத்து நெருக்கடியில் இருந்து தப்ப முடியும்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முறையாக நடைபெறவில்லை என நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பிரதாயத்திற்கு பணிகள் நடைபெறாமல் ஆக்கிரமிப்பினை முழுமையாக அகற்றி, நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனவே அரசியல் கட்சிகளின் தலையிடுகள் இன்றி மக்கள் நலன் கருதி கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதில் மாவட்ட நிர்வாகம் முழு கவனம் செலுத்த வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment