Thursday 29 March 2018

காவிரி வாரிய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது



காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்  அளித்த கெடு இன்றுடன் நிறைவடைவதையடுத்து முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சட்டரீதியாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12ம் தேதி நடைபெற இருக்கிறது. அதை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குவதாக தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றன.

இதற்கிடையே மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்றுடன் காலக்கெடு முடியும் நிலையில், இதுவரை எந்த வாரியமும் அமைக்கப்படவில்லை.

கால அவகாசம் முடியும் வரை பொறுத்திருப்போம் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றுடன் அவகாசம் முடியும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment