திருவாரூர் அருகே மதுபோதையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் நெடுஞ்சாலை கண்காணிப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் (வயது34), மற்றும் காவலர்கள் சரவணன் (40), ராமச்சந்திரன் (38) ஆகிய 3 பேரும் கடந்த மாதம் (பிப்ரவரி) 21-ந் தேதி இரவு திருவாரூர் அருகே உள்ள கொல்லுமாங்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது 3 பேரும் மதுபோதையில் இருந்ததாக போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனுக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் விசாரணை நடத்தினார். விசாரணையில் போலீசார் 3 பேரும் மதுபோதையில் வாகன சோதனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து 3 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் 3 பேரும் சம்பவத்தன்று மதுகுடித்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ராதாகிருஷ்ணன், சரவணன், ராமச்சந்திரன் ஆகிய 3 பேரையும் கடந்த மாதம் 26-ந் தேதி பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment