Wednesday, 21 March 2018

சவுதி அரேபியாவில் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டுத்தர வேண்டும் கலெக்டரிடம், தாய் கோரிக்கை



திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் கண்டிரமாணிக்கம் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மனைவி சாந்தா என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று கலெக்டர் நிர்மல்ராஜை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் கண்டிரமாணிக்கம் பெரிய தெருவில் வசித்து வருகிறேன். என்னுடைய மகன் அன்புச்செல்வம் (வயது 32). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு டிரைவர் பணிக்கு சென்றார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 1-ந் தேதியன்று தனது மகன் அன்புச்செல்வம் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவருடன் பணிபுரிபவர்கள் தொலைபேசி மூலம் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் என்ன செய்வது என்று அறியாமல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம்.

உடலை மீட்டு தர வேண்டும்

50 நாட்கள் ஆகியும் எந்தவித தகவலும் பெற முடியவில்லை. உயிரிழந்த தனது மகனின் உடலையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தனது மகன் அன்புச்செல்வனின் உடலை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தனது மகனின் உடலை மீட்டுத்தர கோரி மனு அளித்த சாந்தா மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment