Sunday 30 September 2018

5 கோடிப்பேரின் ‘பேஸ் புக்’ தகவல்கள் திருட்டு - மீண்டும் சர்ச்சை

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இளைய தலைமுறையினர் தொடங்கி மூத்த குடிமக்கள் வரை அனைத்து தரப்பினராலும் விரும்பப்படுகிற சமூக வலைத்தளமாக ‘பேஸ்புக்’ விளங்குகிறது.

உலகமெங்கும் ஏறத்தாழ 200 கோடிப்பேர் இந்த ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை தீவிரமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 27 கோடிப்பேர் ‘பேஸ்புக்’ பயன்படுத்துகின்றனர்.

ஆனால் அந்த சமூக வலைத்தளத்தின் உபயோகிப்பாளர்கள் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் திருடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்து உலகமெங்கும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும், இங்கிலாந்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தகவல் திருட்டு நடைபெற்றதாக அப்போது கூறப்பட்டது.

இது ‘பேஸ்புக் ’வலைத்தள நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதில், அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியதும், அப்போது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டதும் நினைவுகூரத்தக்கது. இனி தவறுகள் நேராதபடிக்கு பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்படும் என அப்போது அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இப்போது மறுபடியும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் 5 கோடிப்பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி, புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த திருட்டு கடந்த செவ்வாய்க்கிழமையன்று (25-ந்தேதி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் தகவல்களும் பெருமளவில் திருடப்பட்டிருக்கலாம், அவர்களின் ‘பேஸ்புக்’ கணக்குகளும் பாதிப்புக்குள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

‘வியூ ஆஸ்’ என்னும் அம்சத்தின் மூலம் ஹேக்கர்கள் (சட்ட விரோதமாக இணையதளங்களில் புகுந்து திருடுகிறவர்கள், தாக்குதல் நடத்துகிறவர்கள்) ‘பேஸ்புக்’ உபயோகிப்பாளர்களின் கணக்குகளில் நுழைந்து தகவல்களை திருடி இருக்கலாம் என ‘பேஸ் புக்’ நிறுவனத்தின் துணைத்தலைவர் கய் ரோசன் தெரிவித்தார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

‘வியூ ஆஸ்’ என்பது உபயோகிப்பாளர்களின் கணக்கில் உள்ள தகவல்கள், பிற உபயோகிப்பாளர்களுக்கு எவ்வாறு காட்சி அளிக்கிறது என்பதை காட்டும் அம்சம் ஆகும்.

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, “செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் எங்கள் என்ஜினீயர்கள் குழு, 50 மில்லியன் பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் கணக்குகளில் ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். வியூ ஆஸ் என்னும் அம்சத்தின் மூலம் பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் கணக்குகளுக்குள் நுழைந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் உபயோகிப்பாளர்களின் கணக்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கலாம். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது” என கூறினார்.

இதில் என்ன வேடிக்கை என்றால் ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் மற்றும் அதன் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷெரில் சேண்ட் பெர்க் ஆகியோரின் கணக்குகளும் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதுதான்.

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்களின் கணக்குகளுக்குள் ஹேக்கர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர் என தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை நேற்று முன்தினம் 3 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்தது.

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்களின் தகவல்கள் தொடர்ந்து திருடப்படுவது, அந்த சமூக வலைத்தளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் போதுமானவையாக இல்லை என்பதையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment