Saturday, 28 October 2017

திருவாரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கப்புகளுக்கு தடை


திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவகம், திருமண மண்டபம், தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேப்பர் கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள் மூலம் சுகாதார கேடு ஏற்பட்டு டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க வருகிற ஜனவரி மாதம் வரை பேப்பர் கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற பொருட்களில் மழைநீர் சேர்ந்து டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் உள்ள இடங்களை கண்டறிந்தால் பொது சுகாதாரத்துறையின் கண்காணிப்பு அலுவலகத்துக்கு 8940269379 என்ற செல்போன் எண்ணிலும் 04366-241895 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செந்தில்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் எம்.செந்தில் குமார், மருத்துவகல்லுாரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜகோபால், உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment