Wednesday 18 October 2017

நிலவேம்பு குடிநீரினால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நேற்று மதியம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
பின்பு விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:–
தமிழக அரசு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக்கூடிய தொடர் நடவடிக்கைகளை மிகவும் விரைவாக எடுத்து வருகிறது. நேற்று திருவள்ளூரை தொடர்ந்து இன்று தாம்பரம், செங்கல்பட்டு போன்ற இடங்களில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் குறைந்தது 5 நாள் முதல் 7 நாள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து முழுமையாக குணம் பெற்றவுடன் வேலைக்கோ மற்ற பணிகளுக்கோ செல்ல வேண்டும்.
இதுபோல காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களிடம் காய்ச்சலுக்காக ஊசி போட சொல்வதை தவிர்க்கவேண்டும். டெங்குவை பொறுத்தவரை நீர் ஆகாரம் போன்ற உணவுகளை உட்கொள்ளவேண்டும். மேலும், காய்ச்சல் என்று வந்தவுடன் அரசு மருத்துவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நாம் நடக்கும் பொது 100 சதவீதம் உயிர் இழப்பு இல்லாத வகையில் உருவாக்கமுடியும்.
தற்போது திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் கடந்த வாரத்தைவிட தற்போது காய்ச்சல் குறைந்து இருக்கிறது. சேலம், திருச்சி போன்ற இடங்களிலும் காய்ச்சல் குறைந்து வருகிறது.
எனவே 10 முதல் 15 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.
நிலவேம்பு குடிநீர் குறித்து எதிர்மறையான கருத்துகள் நிலவி வருகிறது. அந்த கருத்துகளை யாரும் நம்ப வேண்டாம். நிலவேம்பு குடிநீரினால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. அதில் நல்ல குணங்கள் எல்லாம் இருக்கிறது.
நிலவேம்பு குடிநீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். எனவே அதனை உட்கொள்வதினால் எந்த ஒரு தவறும் கிடையாது.
தெற்கு ஆசியாவில் உள்ள மிகப்பெரிய ஆய்வு நிறுவனமான சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் நிலவேம்பு குடிநீருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே மருத்துவர்களுடைய ஆலோசனையின்படி அதனை உட்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்குனர் இன்பசேகரன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குனர் குழந்தைசாமி, முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் இராஜேந்திரன், பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் உட்பட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment