Sunday 8 October 2017

அடுத்த ஆண்டு முதல் புனித ஹஜ் பயணத்துக்கு மானியம் ரத்து மத்திய அரசுக்கு பரிந்துரை


ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் முஸ்லிம்கள் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தநிலையில் கடந்த 2012–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அளிக்கும் மானியத்தை 2022–ம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து ஹஜ் பயணம் மேற்கொள்வது பற்றி புதிய கொள்கையை உருவாக்க முன்னாள் செயலாளர் அப்சல் அமானுல்லா தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வியிடம் அண்மையில் தனது வரைவு பரிந்துரையை தாக்கல் செய்தது.
இதுகுறித்து முக்தார் அப்பாஸ் நக்வி மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
புனித ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இது வசதிகளை ஏற்படுத்தி தருவதில் சிறந்த கொள்கைகள் அடங்கியதாக திகழ்கிறது. இது வெளிப்படையானது. பயணம் மேற்கொள்பவர்களுக்கு உகந்த கொள்கைகளையும் கொண்டது. இது ஹஜ் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
இந்த புதிய கொள்கை ஹஜ் பயணத்துக்கு மானியம் அளிப்பதை ரத்து செய்கிறது. இதில் மிச்சப்படுத்தப்படும் மானியத் தொகை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரைவு பரிந்துரை கொள்கையின் முக்கிய அம்சங்கள் சிறுபான்மையினர் நல அமைச்சகம் தெரிவித்த தகவல்கள் வருமாறு:–
* ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு கப்பல் வழி பயணமும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் விமானத்தில் பயணம் செய்வதை விட குறைவான கட்டணமே தேவைப்படும். இது தொடர்பாக சவுதி அரேபிய அரசுடன் பேசி விருப்பத்தின் அடிப்படையில் கப்பலில் பயணம் மேற்கொள்பவர்கள் குறித்து முடிவு செய்யலாம்.
* ஹஜ் பயணிகளுக்கான தற்போதுள்ள 21 புறப்பாட்டு மையங்கள் 9 ஆக குறைக்கப்படும். புதிய வரைவு கொள்கையின்படி டெல்லி, லக்னோ, கொல்கத்தா, ஆமதாபாத், மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி ஆகிய 9 நகரங்களில் இருந்துதான் இனி விமான பயணம் மேற்கொள்ள இயலும். இந்த நகரங்களில் ஹஜ் இல்லங்களும் அமைக்கப்படும். இது, ஹஜ் பயணிகள் கப்பல் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும்.
* புதிய புனித ஹஜ் பயண கொள்கையின்படி இந்திய அரசின் ஹஜ் குழு மற்றும் தனியார் மூலம் அனுப்பி வைக்கப்படும் பயணிகளின் விகிதாச்சாரம் முறையே 70:30 என்ற அளவில் இருக்கும். இதன் காரணமாக வெளிப்படை தன்மை அமையும்.
* இந்த புதிய வரைவு கொள்கையை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்து அடுத்த ஆண்டு முதல் (2018) நடைமுறைக்கு கொண்டு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment