Wednesday, 18 February 2015

ட்விட்டரில் வியப்பு: இந்திய அளவில் #தமிழ்வாழ்க முதலிடம்


பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் தமிழிலேயே ஒரு ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் (போக்கு) முதல் முறையாக முன்னிலை வகித்துள்ளது.
பொதுவாக, அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் கருப்பொருளையொட்டிய சொற்களால் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்குகள் (#) ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவிலோ, உலக அளவிலோ முதல் 10 இடங்களை வகிப்பது வழக்கம்.
அதாவது, ஒரு குறிப்பிட்டை ஹேஷ்டேக் சொற்கள் தொடர்பாக நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட குறும்பதிவுகள் இடப்படும்போது, அந்தச் சொற்கள் ட்ரெண்டிங்கில் வலம் வரும்.
கடந்த சில ஆண்டுகளாக, ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவை அனைத்துமே ஆங்கில மொழியில்தான் அரங்கேற்றப்படும். ஆனால், சில தினங்களாக இந்திய மொழிகளுக்கும் ட்ரெண்டிங்கில் முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்கிறது ட்விட்டர்.
அந்த வகையில், முதலில் இந்தி மொழி சொல் ட்ரெண்டிங்கில் வலம் வந்தன. அதைக் கண்ட தமிழ் இணையவாசிகள், தமிழில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்டிங்கில் வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை ட்விட்டரும் ஏற்றுக்கொண்டு தமிழில் 'போக்கு' காண்பிக்க ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் ஹேஷ்டேக் சொல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக்.
இந்த ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்துவதில் காரணமானவர்களில் ஒருவர், தமிழ் இணையப் பிரபலம் பிரசாந்த். இவர், சினிமா விமர்சனங்களை வீடியோ வடிவில் யூடியூபில் பதிவேற்றம் செய்து இணையத்தில் பிரபலமானவர்.
#தமிழ்வாழ்க ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தியது பற்றி அவரிடம் கேட்டபோது, "இந்திய மொழிகளில் உருவாக்கப்படும் ஹேஷ்டேக் சொற்களுக்கு ட்விட்டர் முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்தேன். அந்த வகையில் முதலில் ட்ரெண்டிங்கில் இடம்பெறும் தமிழ் ஹேஷ்டேக், ஒரு நேர்மறை சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதினேன்.
எனவே, #தமிழ்வாழ்க என்ற சொல்லைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். இந்தச் சொல் ஏற்கெனவே ட்விட்டரில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டதுதான். அதைப் பிரபலப்படுத்தும் வகையில் மட்டும் என்னைப் போன்ற ஆர்வலர்கள் இன்று ஈடுபட்டனர். அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. இது உண்மையிலேயே நெகிழவைக்கும் தருணம்" என்றார் பிரசாந்த்.
ட்விட்டரில் #தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியவர் சுடர்கொடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு. #தமிழ்வாழ்க" என்று குறும்பதிவிட்டு, தமிழ் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தார்.
இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் #தமிழ்வாழ்க என்ற சொல், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது கவனிக்கத்தக்கது.

முழு மத சுதந்திரத்தை எனது அரசு உறுதி செய்யும்: மோடி


டெல்லி விக்யான் பவனில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சியில் சைரோ மலபார் தேவாலயத்தின் பேராயர் ஜார்ஜ் அலென்சேரியுடன் பிரதமர் நரேந்திர மோடி| படம்: ஆர்.வி.மூர்த்தி
டெல்லி விக்யான் பவனில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சியில் சைரோ மலபார் தேவாலயத்தின் பேராயர் ஜார்ஜ் அலென்சேரியுடன் பிரதமர் நரேந்திர மோடி| படம்: ஆர்.வி.மூர்த்தி
இந்தியா மத சார்பற்ற நாடாகவே இருக்கும். மதம் தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. வெறுப்பை பரப்ப இங்கு யாருக்கும் அனுமதியில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும், முழு மத சுதந்திரத்தை தனது அரசு உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் அமெரிக்க பத்திரிகையின் தலையங்கம் வரை இந்தியாவில் மத நல்லிணக்கம் குறைந்து வருவதாக பேசப்பட்டது.
பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் மவுனம் கலைத்துப் பேச வேண்டும் எனவும் பல்வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், டெல்லியில் விக்யான் பவனில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா மத சார்பற்ற நாடாகவே இருக்கும். மதம் தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. வெறுப்பை பரப்ப இங்கு யாருக்கும் அனுமதியில்லை" எனக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி பேசியதாவது:
"இந்தியா மத சார்பற்ற நாடாகவே இருக்கும். மதம் தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. வெறுப்பை பரப்ப இங்கு யாருக்கும் அனுமதியில்லை. மத சகிப்புத்தன்மை என்பது ஒவ்வொரு இந்தியரின் மரபணுவிலேயே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மதத்தினரும் மற்ற மதத்துக்கு உரிய மதிப்பை அளிக்க வேண்டும். மத ரீதியான அத்துமீறல்கள் கூடாது. ஒவ்வொரு இந்தியரும் தனது மத நம்பிக்கையை பின்பற்றுவதில் முழு சுதந்திரம் இருப்பதை எனது அரசு உறுதி செய்யும்.
பெரும்பான்மை மதத்தினர், சிறுபான்மை மதத்தினர் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டவிழ்த்துவிட அனுமதிக்கப்படமாட்டாது. மத ரீதியிலான பிரிவினைகள் உலகமெங்கும் அதிகரித்து வருகிறது. இது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு மதத்திலும் உண்மை இருக்கிறது. இந்தியத் தாய் நிறைய பக்தி மார்க்கங்களையும், மத குருமார்களையும் பிரசவித்துள்ளாள். அனைத்து பக்தி மார்க்கங்களையும் வரவேற்று மரியாதை செலுத்த வேண்டும்.
இன்று, பாதிரியார் குரியகோஸ், அன்னை யூப்ரேசியா ஆகியோர் புனிதர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர். இத்தருணத்தில் கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது இந்தியர்கள் அனைவருமே பெருமை கொள்ள வேண்டும். இந்தியா பெருமை கொள்கிறது" என்றார் மோடி.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் தேவாலயங்கள் மீது 5 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களுக்குப் பிறகு கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
பிரதமர் மோடியை இந்நிகழ்ச்சிக்கு அழைத்ததில் கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே இருவேறு கருத்து நிலவுவதாகவும் தெரிகிறது.
ஒரு தரப்பினர், டெல்லியில் தேவாலயங்கள் மீதான தாக்குதலுக்கு பின்னர் எந்த கருத்தும் தெரிவிக்காதவரை ஏன் அழைக்க வேண்டும் என வாதிட்டதாகவும், மற்றொரு தரப்பினர் இந்த அழைப்பின் மூலம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்பாக பிரதமர் மவுனம் கலைக்க வழிவகை ஏற்படும் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Tuesday, 17 February 2015

'உலக அளவில் 2013-ல் இருந்து வங்கிகளில் ரூ.62,000 கோடி சைபர் திருட்டு'



கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்.
உலக அளவில் 2013-ல் இருந்து இப்போது வரை வங்கிகளில் இருந்து சைபர் கொள்ளையர்களால் சுமார் 62 ஆயிரம் கோடி ரூபாய் (1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) தொகை திருடப்பட்டுள்ளது என்று பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான 'கேஸ்பர் ஸ்கை' தெரிவித்துள்ளது.
இன்னும் இந்தத் திருட்டு தொடர்ந்து நடந்து வருவதாக, பிபிசியிடம் கூறியுள்ள அந்நிறுவனத்தின் இன்டர்போல் டிஜிட்டல் குற்றப் பிரிவு இயக்குனர் சஞ்சய் விர்மானி கூறும்போது, "ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, உக்ரைன், கனடா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த வங்களில் சைபர் திருட்டு நடக்கின்றன. இதனை நாங்கள் இன்டர்போல் மற்றும் யூரோபோலுடன் இணந்து கண்காணித்து வருகிறோம்.
பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களை குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களில், இந்தத் திருட்டு பெருமளவில் நடக்கின்றன. சைபர் கிரிமினல் கும்பல்கள் அதிகளவில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் சீனாவில் இருந்தே இயங்குகின்றனர்.
அபாயகர பயனாளிகள் நேரடியாக வங்கிகளைக் குறிவைத்து திருடுகின்றனர். கணக்குகளுக்குரிய பயனாளிகளை அவர்கள் குறிவைப்பதில்லை.
கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க்களை குறிவைத்து தாக்கும் 'கர்பெனாக்' என்ற வைரஸை அனுப்புவதன் மூலம் சைபர் கிரிமினல் கும்பல்கள் தங்களது தேவையைப் பூர்த்தி செய்கின்றனர்.
இந்த 'கர்பெனாக்' வைரஸ் கம்ப்யூட்டர் பயனாளியின் விவரங்களை வீடியோ கண்காணிப்பு வழியாக அனைத்தையும் பார்க்கவும் அவற்றை பதிவு செய்யவும் வழி செய்கிறது.
சில நேரங்களில் தேர்வு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றவும், வெவ்வேறு நேரத்தில் பணத்தை பரிமாற்றம் செய்யும் கட்டளைகளை நிறைவேற்ற செய்கிறது.
இரண்டு அல்லது நான்கு மாத இடைவெளியில் நடக்கும் இத்திருட்டுச் சம்பவத்தில் சராசரியாக ஒருமுறைக்கு சுமார் ரூ.62 கோடி திருடப்படுகிறது. இந்தத் திருட்டு மிகவும் நேர்த்தியான தொழில்நுட்ப வழியிலும் திறமையான முறையிலும் நடத்தப்படுகிறது" என்றார் அவர்.

Monday, 16 February 2015

பன்றி காய்ச்சல்: தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?


ஐந்து ஆண்டுகளுக்கு முன் காய்ச்சல், சளி வந்தாலே எல்லோரும் பயந்தார்கள். அரசு அறிவித்த ஆய்வகங்களுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள நீண்ட வரிசை காத்திருந்தது. பொது இடங்களுக்கு முகமூடி அணியாமல் வரப் பலரும் பயந்தார்கள். அன்று அப்படி மக்களைப் பயமுறுத்திய காய்ச்சல், ‘ஹெச் 1 என் 1’ என்று பெயர் சூட்டப்பட்ட பன்றி காய்ச்சல்தான்.
தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள மெக்சிகோவில் தோன்றிய அந்தக் காய்ச்சலைப் பார்த்து உலகமே பயந்தது. இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. அன்று அந்தப் பெயரைக் கேட்டாலே மக்கள் பயந்தார்கள்.
காய்ச்சல் அசட்டை
இன்றைக்கோ ஆந்திரா, தெலங்கானா எனத் தமிழகத்தின் அருகாமை மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டது தெரிந்தும்கூட, மக்களிடையே பெரிய அளவில் எச்சரிக்கை விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.
இதைச் சாதாரணப் ஃபுளு காய்ச்சல் என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காய்ச்சல் வந்தால் டாமி ஃபுளு மாத்திரை சாப்பிட்டால் போதும், அதேநேரம் காய்ச்சல் வந்தால் மருந்துக் கடைக்குச் சென்று தாங்களாகவே மருந்து வாங்கிச் சாப்பிட வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பொது இடங்களுக்குச் சென்று வந்தால் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்றும் பொது மருத்துவத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதெல்லாமே முன்னெச்சரிக்கைகள்தான், வேறு எப்படிப்பட்ட எச்சரிக்கைகள் தேவை?
கூடுதல் கவனம் தேவை
"பொது இடத்தில் ஒருவர் இருமினாலோ, தும்மினாலோ அதன் மூலம் வெளியேறும் வைரஸ் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பு உள்ளது. பொது இடங்களுக்குச் செல்லும்போது பலரைப் பார்க்கிறோம், கைகுலுக்குகிறோம். ஏற்கெனவே, சிலர் பயன்படுத்திய சில பொருட்களை நாமும் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் பன்றி காய்ச்சல் வைரஸ் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
அதனால்தான் பொது இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாகக் கழுவச் சொல்கிறோம். முகமூடி அணியச் சொல்கிறோம். இது பன்றி காய்ச்சலுக்கு மட்டுமில்லை. பொதுவாகப் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைதான்" என்கிறார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை ஆர்.ஜெயந்தி.
பன்றி காய்ச்சலுக்குச் சொல்லப்படும் அறிகுறிகள் பொதுவாகச் சொல்லப்படும் காய்ச்சல் அறிகுறிகளைப் போன்றவைதான். அதனால், எந்தக் காய்ச்சல் வந்தாலும் நீங்களாகவே மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஒரு வேளை பன்றி காய்ச்சலாக இருந்து நாமே மருந்து வாங்கிச் சாப்பிட்டு அசட்டையாக விட்டுவிட்டால், நோய் முற்றிய நிலைக்குச் சென்றுவிடும் ஆபத்து இருக்கிறது. பன்றி காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் இந்தச் சூழலில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ரத்தப் பரிசோதனை
இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற எல்லாமே பொதுவான அறிகுறிகள் தானே? அப்படியானால் எந்தெந்த அறிகுறிகளைக் கண்டு பன்றி காய்ச்சலுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? "தொடர்ந்து 4, 5 நாட்கள் காய்ச்சல், மூச்சு திணறல், வயிற்றுபோக்கு போன்றவை இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது சாதாரணக் காய்ச்சலுக்கும் பொருந்தக்கூடியதுதான்.
எனவே, இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவரைப் பார்க்கும்போது ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார். அதன்மூலம் பன்றி காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்" என்கிறார் ஆர். ஜெயந்தி.
குழந்தைகள் கவனம்
பெரியவர்கள்கூட எச்சரிக்கையுடன் இருந்து விடுவார்கள். ஆனால் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளைப் பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. பெரியவர்களுக்குச் சொல்லப்படும் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.
காய்ச்சல், சளி இருந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். எந்த வகை காய்ச்சல், சளியாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அது பரவாமல் தடுக்க, இது உதவும் என்கிறார்கள்.

Sunday, 15 February 2015

முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்ற முயற்சி : ஓ.பி.எஸ்


ஓ.பன்னீர்செல்வம்| கோப்புப் படம்
முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
முதலீட்டாளர்கள் ஆயத்த மாநாடு சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த மாநாட்டை தொடங்கி வைத்து தலைமை தாங்கினார்.
இதில் இந்திய தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள், பன்னாட்டு கம்பெனிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: ''தமிழகம் தொழில் தொடங்குவற்கு முதல் மாநிலமாக திகழ்கிறது.முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.
முதலீட்டாளர் மாநாடு மூலம் ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. உள் நாடு, வெளிநாடு, முதலீட்டாளர், தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறோம்.
தொழில் அதிபர்களின் திட்ட அறிக்கையை உடனே பரிசீலித்து தொழில் தொடங்க அனுமதிக்கிறோம். திட்ட அறிக்கையை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு பரிசீலித்து தொழில் தொடங்க பரிந்துரைக்கும்.'' என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
மே மாதம் 23, 24ல் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு முன்னோட்டமாக தொழிலதிபர்களைச் சந்திக்கும் ஆயத்த மாநாடு சென்னையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Saturday, 14 February 2015

திருவாரூரில் நாணயம் மற்றும் தபால்தலை கண்காட்சி அழைப்பு

திருவாரூர் நாணயம் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி 16 திங்கட்கிழமை  மற்றும் 17 செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்கள் திருவாரூர் வடக்கு வீதி ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் பழங்கால நாணயம் அஞ்சல் தலைகள் கண்காட்சி நடைபெற உள்ளது.
வாய்ப்பு உள்ளவர்கள் தங்கள் வீட்டில் உள்ள குறிப்பாக படிக்கும் மாணவ மாணவி கள் உடன் அழைத்து வந்து பயன் பெறவும்
நமது புகைப்படத்துடன் அஞ்சல் தலை வெளியிட அருமையான வாய்ப்பு 

Kodikkalpalayam - ஜமாஅத் தேர்தல் நடைமுறைகள் துவக்கம்

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத்  நிர்வாக குழு தேர்தல் நடந்த நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில்  தஞ்சை வக்ப் வாரிய கண்கணிப்பாளர் தலைமையில் ஏற்பாடு கள் துவக்கியுள்ளது .13/02/2015 அன்று 15 நாட்களுக்கு முதல் வாக்காளர் பட்டியல் வெளியிட்டு சேர்ப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தான் வசிக்கும் தொகுதியில் மட்டுமே வாக்களிக்கவும் ,போட்டியிடவும் முடியும் என்பதால் தொகுதி யில் பெயர் திருத்தம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Friday, 13 February 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 13/02/2015


  •   

நமதூர் சூஃபி நகர் நடுத்தெரு சேவிட்டா வீட்டு மர்ஹூம் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் மனைவியும் சாகுல் ஹமீது அவர்களின் தாயாருமான பாப்பாகனி என்கிற ரஹ்மத் நிஷா அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா 13/02/2015 அன்று மாலை 5 மணிக்கு நமதூர்  முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் 
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

பி.இ. முடித்தவர்களும் பி.எட். சேரலாம்: என்சிடிஇ புதிய திட்டம்



பொறியியல் பட்டப் படிப்புகளான பி.இ., பி.டெக். முடித்தவர்களும் பி.எட். (ஆசிரியர் கல்வியியல் கல்வி) மேற்கொள்ளும் வகையில், புதிய திட்டத்தை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிமுகம் செய்ய உள்ளதாக சந்தோஷ் பாண்டா கூறினார்.
அறிவியல் ஆசிரியருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது மிகக் குறைந்த அளவிலேயே அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தில் இந்த முடிவை என்.சி.டி.இ. எடுத்துள்ளது.
அதன்படி, பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளில் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களை ஒரு பகுதியாகக் கொண்டு படித்தவர்கள் பி.எட். படிப்பை மேற்கொண்டு, பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக சேரலாம் என்றார் அவர்.

Thursday, 12 February 2015

திருவாரூர் மாவட்டத்தில் பிப். 13,14-ல் குடிநீர் விநியோகம் ரத்து


வேதாரண்யம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், திருவாரூர் மாவட்டத்தில் வரும் 13, 14-ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய (பராமரிப்புக் கோட்டம்) நிர்வாகப் பொறியாளர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். 
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 வேதாரண்யம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் குடிநீர்க் குழாய் செல்லும் இடங்களில் பட்டவர்த்தி வாய்க்கால் அருகே திருத்துறைப்பூண்டி-முள்ளியாறு குழாய் தாங்கும் பாலம் மற்றும் வளவனாறு-கரையான்காடு குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய உள்ளதால் பிப். 13,14 ஆகிய இருநாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
 எனவே, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் நகராட்சிகள், முத்துப்பேட்டை, தலைஞாயிறு பேருராட்சிகள், கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டுர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஒன்றியப் பகுதிகளில் பராமரிப்பு நாள்களில் குடிநீர் விநியோம் இருக்காது.
 
 

விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையிலு ள்ள சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை வழங்கப்படுவதால் தகுதி யானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.குறைந்தபட்ச தகுதிகளாக தேசி ய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றிருக்க வேண் டும்.
தேசியப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்ப டும். பள்ளி, கல்லூரி காலங்களில் சாதனை படைத்தவா்கள் மட்டுமே தகுதிபெறுவா். அங்கீ கரிக்கப்பட்ட விளையாட்டுச் சங்கங்கள் மூலம் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங் கேற்றிருக்க வேண்டும். முதியோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் இத்திட்டத்தி ன்கீழ் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கக் கூடாது.
2014 ஏப்.1-ம் தேதியன்று 58 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ. 6,000-க்குள் இருக்க வேண்டும். அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட, விளையாட்டுச் சான்றிதழ் நகல்கள், வருமானச் சான்று நகல், வயது குறித்த சான்று நகல் ஆகியவை கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுகிறவர்கள், மத்திய, மாநில அரசின்கீழ் ஓய்வூதியம் பெறுகிறவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. ஓய்வூதியத் தொகை பெற விரும்புவோர் விளையாட்டுச் சான்றிதழ் நகலுடன் ஆட்சியா் வளாகத்திலுள்ள மாவட்ட விள யாட்டு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து அதே அலுவலகத்தில் பிப்.25-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04366-227158 தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, 11 February 2015

சட்டப்பேரவை தேர்தலில் 67 இடங்களை அள்ளியது: ஆம் ஆத்மி அமோக வெற்றி -




டெல்லியின் பட்டேல் நகர் பகுதியில் நேற்று தேர்தல் வெற்றியை கொண்டாடிய தொண்டர்களைப் பார்த்து கையசைக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ். படம்: பிடிஐ
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை அந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது.
பாஜகவுக்கு மூன்று இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்தது.
புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக வேட்பாளர் நூபுர் சர்மாவை 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பாஜக முதல்வர் வேட்பாளராக களம் இறங்கிய கிரண் பேடி கிருஷ்ணாநகர் தொகுதி யில் ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.கே.பக்காவிடம் தோல்வியைத் தழுவினார். இதேபோல காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட அஜய்மக்கான், கசர் பசார் தொகுதியில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
67 இடங்களில் வெற்றி
மொத்தமுள்ள 70 சட்டப்பேர வைத் தொகுதிகளில் 67 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது. கடந்தமுறை 28 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இந்தமுறை கூடுதலாக 39 இடங்கள் கிடைத்துள்ளன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 32 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஆனால் இந்த முறை முஸ்தபாபாத், ரோஹிணி, விஸ்வாஸ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கடந்த முறையை போலவே தனது கூட்டணிக் கட்சியான அகாலி தளத்துக்கு ஐந்து இடங்களை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள 65 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. இதில் அகாலி தளத்துக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. கடந்த தேர்தலில் அந்தக் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றது.
காங்கிரஸுக்கு பூஜ்ஜியம்
கடந்த சட்டப்பேரவைத் தேர்த லில் காங்கிரஸ் 8 இடங்களை கைப்பற்றியது. இந்த முறை டெல்லி யின் அனைத்து தொகுதிகளில் போட்டியிட்டும் ஓர் இடம்கூட அந்தக் கட்சிக்கு கிடைக்கவில்லை.
வீசாத ‘மோடி அலை’
மக்களவை தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக அடுத்தடுத்து நடைபெற்ற ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிவாகை சூடி ஆட்சி அமைத்தது.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் இரண்டாவது இடம் பெற்றதால் அங்கு கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
‘மோடி அலை’ காரணமாக டெல்லியிலும் பாஜக வெற்றி பெறும் என்று அந்தக் கட்சித் தலைவர்கள் பெரிதும் நம்பினர். ஆனால் அந்தக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
கட்சிகளின் வாக்கு சதவீதம்
டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 67.1 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் ஆம் ஆத்மிக்கு 54.3, பாரதிய ஜனதாவுக்கு 32.2, காங்கிரஸுக்கு 9.7 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
கடந்த தேர்தலைவிட ஆம் ஆத்மிக்கு 25 சதவீதம் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது. பாஜகவிற்கு ஒரு சதவீதம், காங்கிரஸுக்கு 15 சதவீத வாக்குகள் குறைந்துவிட்டன.
இதர கட்சிகள் நிலை
டெல்லி தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஓம்பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளம், சிவசேனா, இந்து மகாசபா மற்றும் இடது சாரி கட்சிகளும் போட்டியிட்டன. இதில் இடதுசாரி கூட்டணி கடைசி நேரத்தில் தனது ஆதரவை கேஜ்ரிவாலுக்கு அளிப்பதாக அறிவித்தது. முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை இந்தமுறை போட்டியிடவில்லை.
ராஜினாமா செய்த அதே நாளில்..
கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 32 இடங்கள் கிடைத்தும் அந்தக் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
28 தொகுதிகளை பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. 49 நாள் ஆட்சிக்குப் பிறகு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் முதல்வர் பதவியை அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு ராஜினாமா செய்த அதே பிப்ரவரி 14-ல் இப்போது தனிப்பெரும்பான்மையுடன் அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். ஆம் ஆத்மி கட்சியால் திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 15-ல் நடைபெற இருப்பதால் ஒருநாள் முன்னதாக ராம்லீலா மைதானத்தில் தனது அமைச்சர வையுடன் பொதுமக்கள் முன்னிலையில் கேஜ்ரிவால் பதவி ஏற்க இருக்கிறார்.
டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சி யின் சட்டப்பேரவைத் தலைவராக அர்விந்த் கேஜ்ரிவால் தேர்ந்தெடுக் கப்பட்டார். இதைத் தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
தேர்தலில் தோல்வி: மக்கான் விலகல்
டெல்லி தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
டெல்லி தேர்தலில் நான் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்து செயல்பட்டேன். ஆனால் நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம். அதற்கு நானே தார்மீக பொறுப்பேற்கிறேன். அதனால் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறேன். இந்தத் தேர்தலில் வெற்றியடைந்துள்ள‌ ஆம் ஆத்மி கட்சிக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ

Tuesday, 10 February 2015

தில்லி தேர்தல் முடிவுகள்: பாஜக, காங்கிரஸ் கற்க வேண்டிய பாடங்கள்


தில்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி  பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்படி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. பாஜக ஒற்றை இலக்கத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லாமலும் உள்ளது.
 இந்த தேர்தலில் இரு கட்சிகளும் சில பாடங்களை கற்பதன் மூலம், இனிவரும் தேர்தல்களின் மோசமான தோல்விகளை தவிர்க்க முடியும். அவை..
மோடி அலை குறைந்து வருகிறது:
அளவுக்கு மீறிய வேகம், ஒரு கட்டத்தில் குறைந்துவிடும் என்பது விதி, இதற்கு மோடியும் விதிவிலக்கு அல்ல.ஒவ்வொரு மாநிலத் தேர்தல்களிலும். மோடியின் வேகம் குறைந்து கொண்டே வந்துள்ளது. டெல்லி தேர்தலில் ஏற்பட்டுள்ள  தோல்வி,  மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. பாஜகவினர் மோடியை மட்டும் ஒருகாரணியை எண்ணிக்கொண்டு தேர்தலில் நிற்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆம் ஆத்மி தில்லியில் ஒரு வலிமையான சக்கி:
ஆம் ஆத்மி கட்சி, தேசிய அளவில் பெரிய கட்சி கிடையாது, அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி தேர்தலில் தோற்றது. ஆனால் தில்லியில்அந்த கட்சி மிகப்பெரிய வலிமையுடன் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் உள்ளது எனவே அங்கு மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. மாநிலத் தேர்தல்களில் காங்கிரசும், பாஜகவும் மெத்தனப்போக்குடன் இல்லாமல், மற்ற  மாநில கட்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலிமையாக ஏதாவது செய்ய வேண்டும்.
காங்கிரஸ்க்கு தொடரும் தோல்வி:
காங்கிரஸ் கட்சிக்கு  தில்லியில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 வது முறையாக ஆட்சி செய்த போது நடைபெற்ற ஊழல்களை வாக்காளர்கள் மன்னிக்க தயாராக இல்லை என்பதை காங்கிரஸ் கட்சியின் தலைமை புரிந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தியின் தலைமையில் கீழ் புதிய எழுச்சி உருவாக வேண்டும்.
கிரண் பேடியை தேர்தெடுத்ததால் பாஜகவில் ஏற்ப்ட்ட ஒற்றுமையின்மை
கிரண்பேடியை முன்நிறுத்தி தில்லி தேர்தலில், மோடி வைத்த கோரிக்கையை  பாஜகவின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்கவில்லை. மேலும் தில்லி மாநில பாஜகவில் அதிக அளவில் அதிருப்தி நிலவியது. கிரண்பேடியை வேட்பாளராக நிறுத்திதால் மாநில பாஜக தொண்டர்களுக்கு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லாமல் போனது.
ஆட்சியார்கள் மீதான அதிருப்தி:
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில தேர்தல்களில் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியால் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. ஆனல் தில்லி அப்படியல்ல. தில்லி இந்தியாவின் தலைநகர். இங்கு தான் மோடி பிரதமராக உள்ளார். எனவே மற்ற கட்சிகள் மீதான செயல்திறன் அதிருப்தி மூலம்,  இங்கு பாஜகவால் ஆதாயம் பெறமுடியவில்லை.
பாஜகவிடம் இன்றும் எச்சரிக்கையாக இருக்கும் முஸ்லீம்கள்
சாக்ஸி மகாராஜ் போன்றோர் இந்துத்துவாவை முன்னிறுத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் முஸ்லீம்களை பாஜகவிடம் இருந்து விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அமித் ஷாவின் வியூகத்தில் பின்னடைவு:
தில்லி தேர்தலில் பாஜகவின்  மிகப்பெரிய பலம் என்றால் அது அமித் ஷா தான். ஆனால், கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது மற்றும் வேட்பாளர் தேர்வு போன்ற அவருடைய முடிவுகள் வாக்காளர்களிடம்  எடுபடவில்லை.
மாநில தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வெவ்வேறானவை:
தில்லி தேர்தல் மோடியை முன்னிறுத்தி அமையவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதேநேரம் ஆம் ஆத்மி கட்சி , கெஜ்ரிவாலையே முன்னிறுத்தி செயல்பட்டது. தனிமனித ஆளுமையை மையப்படுத்தி இந்த தேர்தல் இருந்தது. மேலும் மாநில தேர்தல். நாடாளுமன்ற தேர்தலுக்கிடையேயான வேறுபாட்டை  வாக்காளர்கள் புரிந்து கொள்வதற்கான விழிப்புணர்வும் தற்போது அதிகரித்துள்ளது.
தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவறாகாது:
தங்களுக்கு எதிராகவே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் இருந்ததை அந்த கட்சிகள் ஏற்கவில்லை. ஓரளவிற்கு வெற்றி என்ற கருத்துக்கணிப்புகளையும் மீறி ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
உலக தேர்தல் வரலாற்றில் 95 சதவீத இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. எனவே தன் மீதான எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ந்து செயல்படுவார் என்று நம்புவோம்.

பட்டங்கள் வேலை தேடுவதற்கான ஒரு நுழைவுச் சீட்டு மட்டுமே


மாணவர்கள் பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமென வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. குணசேகரன் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் பட்டம் பெறுவது மட்டும் போதுமானதல்ல. மாணவர்கள் பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பட்டங்கள் வேலை தேடுவதற்கான ஒரு நுழைவுச் சீட்டு மட்டுமே. கடுமையான உழைப்புடன் நேரத்தை சரியான விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக நூலகத்தில் மாணவர்கள் நேரத்தை கூடுதலாக செலவழிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் லதா பிள்ளை சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு பேசியது:
நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் முன்னேற்றம் அவசியமாகிறது. இளைஞர்களுக்கு சரியான பயிற்சி இல்லையென்றால் நாடு வளர்ச்சியடையாது.
இளைஞர்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் நல்ல கல்வி கிடைக்கிறது. தற்போது நிதியறிவு, பொருளாதார அறிவு, தொழில் முனைவதற்கான அறிவு ஆகியவை தேவைப்படுகின்றது. ஆகவே இளைஞர்கள் அத்தகைய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றார் அவர்.
கல்வி, தனித்திறனில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

Monday, 9 February 2015

வெளிநாட்டு மௌத் அறிவிப்பு 9/2/2015

  
நமதூர்  தெற்குத்தெரு டீக்கடை மர்ஹூம் குத்புதீன் அவர்களின் மருமகனும் முஸ்தபா கமால் அவர்களின் தகப்பனாரும் காசிம் ,பூட்டோ இவர்களின் மச்சானுமாகிய முஹம்மது அவர்கள் மலேசியாவில் மௌத்.

திருவாரூரில் தீ விபத்து: 10 கடைகள் எரிந்து நாசம்


திருவாரூரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தேனீர் கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது.
திருவாரூர் பழையப் பேருந்து நிலையம் பகுதியில் சனிக்கிழமை இரவு வியாபாரத் த்தை முடித்து உரிமையாளர்கள் கடையை பூட்டி சென்றனர். சுமார் 11 மணியளவில் அப்பகுதியில் ஒரு கடை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டு பலன் இல்லை. தீ கொழுந்து விட்டு மள மளவென எரியத் தொடங்கி அடுத்தடுத்த கடைகளும் பரவியது.
இதனால் பெட்டிக்கடை, செருப்புக்கடை, தேனீர் கடை, கவரிங் கடைகள் உள்ளிட்ட 13 கடைகள் தீயில் எரிந்து நாசமானது. திருவாரூர், நன்னிலம், குடவாசல், கீழ்வேளூர் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பொருள்கள் சேதமடைந்தன. திருவாரூர் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Sunday, 8 February 2015

வயிற்றுக்கு இதம் தரும் மணத்தக்காளி


தாவரவியல் பெயர்: Solanum nigrum
அடையாளம்: தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கீரை வகைகளில் ஒன்று. ஆசியா-ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட இது, சிறிய செடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகளைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். சிவப்பு, கருப்பு நிறங்களில் காணப்படும் இதன் பழங்களை நிலக் காய்ச்சலில் காய வைத்து வற்றலாகப் பயன்படுத்தலாம்.
இனப்பெருக்கம்: விதைகளைக் கொண்டே இதை இனப்பெருக்கம் செய்ய முடியும்.
வரலாற்றில்: பிரிட்டனில் நெடுங்காலமாக இது இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம இயற்கையாளர் பிளினி, டிஸ்கார்டிஸ் உள்ளிட்டோர் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
கைமருத்துவ பயன்பாடு: அஜீரணம், இருமல், ஆஸ்துமா, வீக்கம், வயிற்றுப்புண், தோல் நோய்கள், காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த மணத்தக்காளி பயன்படுகிறது.
இலைகளைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடுவதால் வாய்ப்புண், வயிற்றுப்புண், மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்றவை நீங்கும். இதற்குக் காரணம் அதில் உள்ள ஊட்டம், குடலுக்கு இதம் தரும் தன்மை, பசியை அதிகரிக்கும் தன்மையாலும்தான். தோல் நோய், மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, கண் பார்வை, நீர் பிரிதல் போன்றவற்றுக்கும் மணத்தக்காளி உதவும்.
மணத்தக்காளி இலைகளைத் துளசி அல்லது எலுமிச்சைச் சாற்றுடன் அரைத்துப் பூச, மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் குறையும். மணத்தக்காளிக் காயை அரைத்துப் பாலாடையுடன் கலந்து பூசினால் தேமல் மறையும்.
- நேயா





ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம்: 3 மாதத்தில் சோதனை முறையில் அறிமுகம்


தமிழகத்தில் தற்போது காகித வடிவில் உள்ள குடும்ப அட்டை களுக்கு மாற்றாக கொண்டு வரப்படவுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் அடுத்த மூன்று மாதத்தில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ரேஷன் கார்டுகள் காகிதத்தில் இருப்பதால் போலி ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. இதனை தடுக்க மத்திய நுகர் வோர் அமைச்சகம் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தை கடந்த 2010-ம் ஆண்டு அறிவித்தது.
இந்த திட்டத்தை முதற்கட்ட மாக தமிழகம் உட்பட 11 மாநிலங் களில் அமல்படுத்துமாறு வலியுறுத் தியது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப் பட்டது.
இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்த மாக புதிய ரேஷன் கார்டு வழங்கப் படவில்லை. இதனால் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ரேஷன் கார்டுகளில் அந்தந்த ஆண்டுக் கான உள்தாள் ஒட்டப்பட்டு வரு கிறது. இந்த ஆண்டுக்கான உள் தாள் ஒட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வரு வதற்கான அனைத்து முயற்சி களுக்கும் மாநில உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை தயாரிக்கும் திட்டப்பணியை ஆம்னி அகேட் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
மாநில உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் ஆம்னி அகேட் நிறுவனம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை சுருக்க குறீ யிடான க்யூ.ஆர் (QR CODE) முறையில் கொண்டுவர திட்ட மிட்டுள்ளது. இந்த க்யூ.ஆர் முறையில் வடிவமைக்கப்பட உள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டு பிளாஸ்டிக் அட்டையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
“கியூ. ஆர் முறையில் கொண்டு வரப்படவுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்துக்கு ரூ.318 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த மூன்று மாதத்தில் சோதனை முறையில் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சோதனை முறை திட்டம் முதற்கட்டமாக அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப் படும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப் படும். தற்போதுள்ள ரேஷன் கார்டில் பொருட்களின் எடை அளவு குறிப்பிடப்படுவது போல் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உணவு பொருட்களின் எடை அளவு குறிப்பிடப்பட்டு ரசீது போல் வழங்கப்படும். அல்லது செல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவர், தலைவி புகைப்படங்கள் இடம் பெறுவது குறித்து அரசு முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினா

Saturday, 7 February 2015

கணவரின் வருமானம், சொத்து விவரங்களை ஆர்டிஐ மூலம் மனைவி அறிய முடியுமா?

கணவரின் வருமானம், சொத்து விவரங்களை ஆர்டிஐ மூலம் மனைவி அறிய முடியுமா? என்ன சொல்கிறது தகவல் ஆணையம்

ஒரு கணவரின் வருமானம், சொத்து மதிப்பு, முதலீடுகள் குறித்து அவரது மனைவி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ள உரிமை உள்ளது என்று மத்திய தகவல் ஆணையம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
குடும்ப வன்முறையில், வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு நிராதரவான மனைவி, தனது கணவரின் சொத்து மதிப்பு, வருமானம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு கொடுத்தார்.
ஆனால், இவை எல்லாம் ஒருவரின் தனிப்பட்ட விஷயங்கள், இதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தர இயலாது என்று மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பெண் மத்திய தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தார்.
மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், ஒவ்வொரு விஷயத்திலும் விதி விலக்குகள் உள்ளன. நிராதரவாக நிற்கும் பெண் தனது உரிமையைப் பெற வேண்டும் என்றால், அவரது கணவரின் சொத்து விவரங்கள் தெரிய வேண்டும். அப்பெண்ணை மூன்றாம் நபர் என கருத முடியாது. எனவே, அவருக்கு 48 மணி நேரத்துக்குள், கணவரின் அனைத்து சொத்து மற்றும் வருமான விவரங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மத சகிப்புத்தன்மை இல்லை: ஒபாமா கருத்து


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா | கோப்புப் படம்
இந்தியாவில் தற்போது மத சகிப்புத்தன்மை இல்லாததை காந்தியடிகள் காண நேர்ந்தால், அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
தன் இந்தியப் பயணம் குறித்து வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இது தொடர்பாக பேசும்போது, "மகாத்மா காந்தி மீது இந்தியா வைத்திருக்கும் அதே நன்மதிப்பை அமெரிக்காவும் கொண்டுள்ளது.
மிக அற்புதமான, பன்முகத்தன்மை கொண்ட அழகான நாடாக இந்தியா உள்ளது. அங்கு பார்த்த ஒவ்வொரு கலாச்சாரத்தையும் கண்டு நானும் மிஷேலும் வியப்படைந்தோம்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மதக் கோட்பாடுகளும், அவர்களது கலாச்சார நிகழ்ச்சிகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது. இந்தியாவில் பலதரப்பட்ட மத நம்பிக்கைகளால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சகிப்புதன்மையின்மையை இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி கண்டிருந்தால் அதிர்ந்து போயிருப்பார்" என்றார் ஒபாமா.
இதனை அவர் எந்த ஒரு மதத்தினரையும் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்திய பயணத்தின்போது, பாஜகவை மனதில் வைத்து மத தீவிரவாதத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா மீண்டும் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ஒபாமா, தனது பயணத்தின் இறுதி நாளான ஜனவரி 27-ம் தேதி டெல்லியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, நாட்டின் வளர்ச்சிக்கு மத சகிப்புத்தன்மை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி இருந்தார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தப் பேச்சு துரதிர்ஷ்டவசமானவை என்று பாஜக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.