Sunday 16 December 2018

நகராட்சி வார்டுகள் அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் உள்ள 124 நகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு அதுகுறித்த விவரங்கள் தமிழக அரசிதழில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த 2016-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது வார்டு மறுவரையறை உள்ளிட்ட பணிகள் முறையாக
மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்தது.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அட்டவணைகளை நிறுத்தி வைத்த உயர்நீதிமன்றம், வார்டு மறுவரையறை பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள உத்தரவிட்டது.
மாநிலத் தேர்தல் ஆணையப் பணி: மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறைப் பணிகளை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதனிடையே, வார்டு மறுவரையறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அறிவிப்பின்படி அரசிதழில்...வார்டு மறுவரையறைப் பணிகளை மாநகராட்சி, நகராட்சி வாரியாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதில், தமிழகத்தில் உள்ள 124 நகராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை விவரங்களை டிசம்பர் 15-ஆம் தேதி வெளியிடப் போவதாக அண்மையில் அறிவித்தது. அதன்படி, சனிக்கிழமை (டிச. 15) தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நகராட்சியிலும் உள்ள வார்டுகளின் எல்லை வரையறைகள் அதாவது தெருக்களின் விவரங்கள் உள்பட அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறுகையில், நகராட்சிகளின் வார்டுகள் எல்லை மறுவரையறை பட்டியல் என்பது சுமார் ஆயிரம் பக்கங்களைக் கொண்டதாகும். இந்த விவரங்கள் அனைத்தும் விரைவில் தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், தமிழக அரசின் எழுது பொருள் அச்சுத் துறையிலும் உரிய கட்டணத்தைச் செலுத்தி அதன் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment