Thursday, 27 December 2018

2019-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை ஜனவரி 2-ந்தேதி கூடுகிறது

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 2-ந்தேதி (புதன் கிழமை) தொடங்குகிறது.

இது 2019-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் 2-ந்தேதி கூட்டத்தில் கவர்னர் பன்வாரி லால் புரோகித் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார்.

இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழக கவர்னர், சட்டசபை கூட்டத்தை 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் கூட்டி இருக் கிறார். அன்று காலை 10 மணிக்கு அவர் உரை நிகழ்த்த உள்ளார்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

தமிழக சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுவது இது 2-வது முறை ஆகும். கவர்னர் உரையில் அரசின் சாதனைகள், வளர்ச்சித்திட்ட பணிகள், எதிர்கால திட்டங்கள் பற்றிய தகவல்கள் இடம் பெற்று இருக்கும்.

சட்டசபையில் உரையாற்றுவதற்காக வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, சபாநாயகர் ப.தனபால், செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்று, சட்டசபைக்குள் அழைத்துச்செல்வார்கள். சபாநாயகர் அமரும் மேடையில் கவர்னருக்கு தனி இருக்கை அமைக்கப்பட்டு இருக்கும். அதில் அமர்ந்தபடி அவர் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அவர் தனது உரையை முடித்ததும், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். அத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடையும்.

2-வது நாளான 3-ந்தேதி சட்டசபை கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாநிதி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும். அதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அது முடிந்ததும் அன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.

இதற்கிடையே, அலுவல் ஆய்வுக்குழு கூடி கவர்னர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவு எடுக்கும்.

அலுவல் ஆய்வுக்குழு குறிப்பிட்டு இருக்கிற நாட்களில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். இதில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பேசுவார்கள். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உரைக்கு பிறகு, தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து பேசுவார்.

இந்த கூட்டத்தொடரில் கஜா புயல் நிவாரண பணிகள், ஸ்டெர்லைட், மேகதாது, விவசாய நிலத்தில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த கூட்டத் தொடரில் சூடான விவாதத்துக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.

மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த கூட்டத் தொடரில் அரசின் கவனத்தை ஈர்த்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கவர்னர் உரையை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து, வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

No comments:

Post a Comment