Tuesday 11 December 2018

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்னும் 9 மாதங்கள் பதவி இருக்கும் நிலையில் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதற்கான குறிப்பிட்ட காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை, சொந்த காரணம் என்று மட்டுமே தெரிவித்துள்ளார்.  
அவர் தனது ராஜினாமா கடிதத்தில், ‘‘தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக நான் எனது தற்போதைய பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன். இத்தனை வருடங்கள் நான் பல்வேறு பொறுப்புகளில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றியது பெருமைக்குரியது, மரியாதைக்குரியது. வங்கியின் சமீபகால மகத்தான சாதனைகளுக்காக என்னுடன் கடினமாக உழைத்த அலுவலர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

ஆனாலும் இந்த ராஜினாமாவுக்கு ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் தான் காரணம் என்றும், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் முயற்சியே இது என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். உர்ஜித் படேல் ராஜினாமா தொடர்பாக மத்திய அரசு பல்வேறு தரப்பில் விமர்சனங்களை எதிர்கொண்டது.

சக்தி காந்த தாஸ் நியமனம்

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக முன்னாள் நிதித்துறை செயலாளரும், தற்போதைய நிதி கமிஷனின் உறுப்பினருமான சக்தி காந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் தமிழகத்தில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர். சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் மூன்று ஆண்டுகள் இருப்பார்.

No comments:

Post a Comment