பக்ரீத் பண்டிகை உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெரு நாள் எனவும் அழைக்கப்படுகிறது.
இஸ்லாம் மார்க்கத்தின் புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து மெக்கா நகரில் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் இங்கு குவிந்துள்ளனர்.
5 நாட்கள் நடைபெறும் இந்த புனித பயணத்தில் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் தொழுகை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றிய பின்னர், மினா நகருக்கு புறப்பட்டு செல்லும் யாத்ரீகர்கள், அங்கு சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிவிட்டு அரபா மலையில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளை புறப்பட்டு செல்கின்றனர். ஹஜ் புனித பயணத்திற்காக மக்கள் குவிந்துள்ளதால் மெக்கா மற்றும் மதினாவை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹஜ் கடமையின் உள்ளார்ந்த தத்துவங்கள்
இஸ்லாத்தின் அடிப்படையான கடமைகளில் ஏராளமான உள்ளார்ந்த தத்துவங்கள் அடங்கியுள்ளன. இஸ்லாத்தின் ஒவ்வொரு கடமையிலும் அபூர்வமான, ஆச்சரியமான, தத்துவரீதியான அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
அவற்றில் குறிப்பிடத்தக்கது தொழுகை. தொழுகை ஏன் கடமையாக்கப்பட்டது?
இறைவனை நினைவு கூர்வதற்கு ஏராளமான வழிகள் உண்டு, அவற்றில் சிறந்தது தொழுகை. பாவங்களிலிருந்து ஒரு முஸ்லிமை பாதுகாக்கும் சாதனம் தொழுகை. இவற்றை பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
‘நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. என்னையே நீங்கள் வணங்குங்கள். என்னை தியானித்துக்கொண்டே இருக்கும் பொருட்டு தொழுகையைக் கடைப்பிடியுங்கள்’ (20:14).
‘‘இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக. நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும், தீமையையும் விட்டு விலக்கும்’ (29:45)
ஆடம்பர வாழ்க்கையின் ஆதாரத்தை தேடுவதிலிருந்து ஆன்மாவைக் கட்டுப்படுத்தாத வரை தொழுகையை நிறைவு செய்யமுடியாது.
அடுத்தது நோன்பு. அந்த நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?
மனித உள்ளங்களில் இறையச்சத்தை ஏற்படுத்தவும், மனித நெஞ்சங்களில் ஷைத்தானின் வீண் சந்தேகங்களை அப்புறப்படுத்தவும் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது.
‘நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது’. (திருக்குர்ஆன் 2:183)
அதுபோல ‘ஜகாத்’ ஏன் கடமையாக்கப்பட்டது தெரியுமா?
உள்ளங்களை தூய்மைப்படுத்துவதற்கும், ஆன்மாக்களை அழகுபடுத்துவதற்கும் தான் ஜகாத் கடமையாக்கப்பட்டுள்ளது. உள்ளும், புறமும் ஜகாத்தினால் தூய்மை அடைகிறது.
‘(நபியே) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக்கொண்டு, அதனால் அவர்களை உள்ளும், புறமும் தூய்மையாக்குவீராக’ (திருக்குர்ஆன் 9:103)
அடுத்து வருவது ஹஜ். இந்த ‘ஹஜ் பயணம் கடமையாக்கப்பட்டதற்கு பலவிதமான தத்துவ காரணங்கள் உண்டு. அவற்றை இங்கு விரிவாகக் காண்போம்.
புனித ‘மக்கா’ சென்று இஸ்லாம் கூறும் சில வணக்க வழிபாடுகள் செய்வது ‘ஹஜ்’ என்று அழைக்கப்படுகிறது.
உடல் பலமும், பண பலமும் நிறைவாகப் பெற்றவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது புனித ‘மக்கா’ சென்று ‘ஹஜ்’ செய்வது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமை ஆகும்.
‘இன்னும் அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்தல் அதன்பால் சென்று வர சக்தி பெற்றவர் மீது கடமையாகும்’ என்பது திருக்குர்ஆன் (3:97) வசனமாகும்.
புனித ஹஜ் பயணம் தொடர்பான நபிமொழிகள் வருமாறு:–
‘‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையில், ‘மக்களே, உங்கள் மீது அல்லாஹ் ஹஜ் கடமையாக்கியுள்ளான் ; எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்’ என்றார்கள். ஒரு தோழர் எழுந்து, ‘அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு ஆண்டுமா ஹஜ் கடமை? என மூன்று தடவை கேட்டார்’ அதுவரை மவுனமாக இருந்த மாநபி (ஸல்) அவர்கள் ‘நான் ஆம் என்றால் அது ஒவ்வொரு ஆண்டும் கடமையாகிவிடும்’ (அவ்வாறு அது ஒவ்வொரு ஆண்டும் கடமை இல்லை) என பதிலளித்தார்கள்’’ (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி).
‘‘ஹஜ் செய்வது முந்திய பாவங்கள் அனைத்தையும் அழித்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர் : அமர் பின் ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம்)
‘‘ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டில் ஒன்றை மற்றொன்றோடு பின்பற்றுங்கள். தங்கம் மற்றும் வெள்ளி, இரும்பு ஆகியவைகளின் அழுக்குகளை கொல்லனின் நெருப்பு போக்குவது போன்று, அவ்விரண்டும் ஏழ்மை மற்றும் பாவத்தையும் போக்கிவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : திர்மிதி)
‘‘ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் இறைவனின் தூதுக்குழுவினர் ஆவர். இறைவனிடம் அவர்கள் பிரார்த்தித்தால், அதை அவன் ஏற்றுக் கொள்கிறான், இறைவனிடம் அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால், அவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸயீ, இப்னுமாஜா)
‘‘ஹஜ் பயணத்திற்கு செலவு செய்வது இறைவழிப்பாதையில் ஏழுநூறு மடங்கு செலவு செய்வதைப் போன்று ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’’ (அறிவிப்பாளர் : புரைதா (ரலி) நூல் : அஹ்மது)
இஸ்லாமியக் கடமைகளை நான்கு விதமாக கூறலாம். 1) உள்ளம் சார்ந்தது. இதுதான் அடிப்படை. இதற்கு ஈமான் (இறை நம்பிக்கை) என இஸ்லாம் கூறுகிறது.
2) உடல் சார்ந்தது. இது தொழுகை மற்றும் நோன்பை குறிக்கிறது.
3) பொருள் சார்ந்தது. இது ஜகாத் மற்றும் ஸதகா, அன்பளிப்பு, வக்ப், அழகிய கடன் போன்ற பொருளாதாரம் சார்ந்த கடமைகளை குறிக்கிறது.
4) உடல் மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கடமை தான் புனித ஹஜ் எனும் கடமையாகும். உடல் பலமும், பணபலமும் ஒன்று சேர பெற்றவர்களுக்குத்தான் ஹஜ் கடமை. இரண்டு தகுதிகளையும் பெறாதவர் அல்லது இரண்டில் ஒரு தகுதியை பெறாதவர் மீது ஹஜ் கடமையாகாது.
இதை பின்வரும் திருக்குர்ஆனின் வசனம் தெளிவுபடுத்துகிறது.
‘‘அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை’’ (திருக்குர்ஆன் 3:97)
ஹஜ் என்பது உள்ளம் ஆசைப்படும் வணக்கம், உயிரோட்டமான வணக்கம். அது ஒரு உலக மகாநாடு. அங்கு சகோதரத்துவம் வெளிப்படுகிறது, சமாதானம் நிலவுகிறது. அன்பு பெருகுகிறது, அமைதி நிலவுகிறது.
தேசம், இனம், மொழி, நிற வேறுபாடுகளைக் களைந்து ஒரேவிதமான வெண்மை நிற சீருடைகளை அணிந்து இறையில்லத்தில் கூடி தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள். இது இஸ்லாமியர்களின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.
பல உள்ளார்ந்த தத்துவங்களை புனித ஹஜ் பயணம் எடுத்துரைக்கிறது. இத்தகைய தத்துவங்களின் அடிப்படையில்தான் முஸ்லிம்கள் தமது உலக வாழ்வை அமைத்துக் கொள்ளும்படி இஸ்லாமும் விரும்புகிறது. அதுவே இறைவனின் விருப்பமும், இறைத்தூதரின் விருப்பமும் ஆகும்.
No comments:
Post a Comment