Thursday, 2 August 2018

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் மறைவு; முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி

மதுரை,

திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (வயது 69).  இவர் மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் வசித்து வந்தார்.  நேற்று இரவு இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் எம்.எல்.ஏ போஸுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு நடக்கிறது. மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் உடலுக்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் சென்ற துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் ஏ.கே. போசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, அ.தி.மு.க.வில் விசுவாசமிக்க தொண்டன் ஆக பணியாற்றியவர் ஏ.கே. போஸ்.  மக்களிடையே நன்மதிப்பினை பெற்று 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

கட்சியில் படிப்படியாக தன்னுடைய உழைப்பினால் முன்னேறியவர்.  அவரது மறைவு மிகுந்த வருத்தம் தருகிறது என கூறினார்.

இதேபோன்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஏ.கே. போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மக்களுக்காக உழைத்து வந்த அவரது மறைவு பேரிழப்பு.  மக்களுக்காக பல்வேறு திட்டங்களை ஜெயலலிதாவிடம் கொண்டு சென்றவர்.

கட்சி மீது கொண்ட விசுவாசத்தினால் மக்களுக்கு சேவை செய்ய அவருக்கு ஜெயலலிதா 3 முறை வாய்ப்பு தந்துள்ளார்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment