Friday, 24 August 2018

முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.410 கோடியில் புதிய அணை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மேட்டூர் அணையில் இருந்து சமீபத்தில் 2 லட்சம் கனஅடிக் கும் அதிகமான அளவில் உபரி நீர் திறக்கப்பட்டதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் 182 ஆண்டுகள் பழமை வாய்ந்த முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் 9 மதகுகள் கடந்த 22-ந் தேதி இரவு திடீரென உடைந்தன. உடைந்து விழுந்த மதகுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தனி செயலாளர் சாய்குமார், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்று இடிந்த அணையை சீரமைப்பது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் நேற்று காலை திருச்சி சென்றார். விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், அவர் காலை 9.30 மணி அளவில் முக்கொம்புக்கு போய்ச் சேர்ந்தார். அங்கு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட மதகுகளை அவர் பார்வையிட்டார்.

உடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்து கொண்டு இருந்ததால் எடப்பாடி பழனிசாமி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கி நடந்து சென்றார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைப்பு பணிகள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன என்பதை அவரிடம் விளக்கி கூறினார்கள்.

அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி அணையில் உடைப்பு ஏற்பட்டது, இப்போது கொள்ளிடம் மதகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதே?

பதில்:- முக்கொம்பு மேலணையில் அதாவது கொள்ளிடம் ஆற்றின் கதவணையில் 9 ‘ஷட்டர்’களில் உடைப்பு ஏற்பட்டு இருக்கின்றது. அதை தற்காலிகமாக சீரமைக்க வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 4 நாட்களுக்குள் அந்த சீரமைப்பு பணிகள் முழுமை பெறும். கிருஷ்ணகிரி அணை உடையவில்லை, ‘ஷட்டர்’ பழுதாகி இருந்தது. பழுதடைந்த ஷட்டரை சரி செய்துவிட்டார்கள்.

கேள்வி:- 9 மதகுகள் உடைவதற்கு என்ன காரணம்?

பதில்:- 1836-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கதவணை. கிட்டத்தட்ட 182 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அணை கட்டப்பட்டு இருக் கின்றது. இது முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. கடந்த முறை, அதாவது 1924, 1977, 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் வெள்ளம் வந்த போது, இந்த கொள்ளிடம் ஆற்றின் மேலணை வழியாக உபரிநீர் வெளியேறி இருக்கிறது. அப்போது, 5, 6 நாட்கள்தான் மேலணை வழியாக உபரிநீர் வெளியேறி இருக்கிறது. ஆனால், தற்போது முதற்கட்டமாக 8 நாட்கள் தொடர்ந்து அதிக அளவில் உபரிநீர் இதன் வழியாக வெளியேறியது. அதற்கு பிறகு இரண்டாம் கட்டமாக, 12 நாட்கள் தொடர்ந்து அதிக வெள்ள நீர், இந்த மேலணை வழியாக வெளியேறி இருக்கிறது. அதனுடைய அழுத்தத்தின் காரணமாக இது தற்பொழுது உடைந்து இருக்கின்றது.

கேள்வி:- மதகுகள் ஆண்டுதோறும் பராமரிக்கப்பட்டு இருக்கவேண்டும், இதை முதலிலேயே பார்த்திருக்க வேண்டுமல்லவா?

பதில்:- ஆண்டுதோறும் பராமரித்துக்கொண்டு தான் வருகிறோம். நாம் கூட நன்றாகத்தான் இருக்கிறோம், திடீரென்று காய்ச்சல் வந்துவிடுகிறது அல்லவா?. எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறோம். யாருக்காவது நோய் வரும் என்று தெரியுமா? இது தற்காலிகமாக ஏற்பட்ட விபத்து. இதற்கான புதிய திட்டம் வகுக்கப்பட்டு இருக்கின்றது. கொடி நடப்பட்டு இருக்கின்றது,

ஏற்கனவே, மேலணையில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் புதிய அணை ஒன்று கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து இருக்கின்றது. கொள்ளிடத்தில் முழுமையாக இரண்டு பக்கங்களிலும் கட்டுகிறோம். அதாவது கொள்ளிடம் ஆற்றில் ஒரு பகுதியில் 325 கோடி ரூபாய் மதிப்பிலும், 10 கண்மாய் உள்ள மற்றொரு பகுதியில் 85 கோடி ரூபாய் மதிப்பிலும் அந்த பணியை தொடங்குகிறோம்.

ஆகவே, இரண்டு பகுதிகளிலுமே, புதிதாக 100 மீட்டருக்கு அப்பால் கதவணை கட்டப் படும், கிட்டத்தட்ட 15 மாதங்களில் கட்டி முடிப்பதாக நிபுணர் குழுவினர் தெரிவித்திருக்கின்றார்கள். அந்த பணிகளெல்லாம் வேகமாக நடைபெறுவதற்குண்டான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்.

கேள்வி:- புதிய கதவணை கட்டும் பணி எப்போது தொடங்கும்?

பதில்:- இப்பொழுதுதான் நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட பணி நடைபெறவேண்டும். அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, துரிதமாக அந்த பணிகள் நடைபெற்று, அதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அதை எந்த வடிவத்தில் கட்ட வேண்டும் என்பதையெல்லாம் நிபுணர் குழு மூலமாக ஆராயப்பட்டு, அந்த பணி விரைவில் தொடங்கும்.

கேள்வி:- சம்பா விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்படுமா?

பதில்:- எந்த விதத்திலும் பாதிக்காது. ஏனென்றால், மேலணையைவிட காவிரி 2 அடி குறைவாக இருக்கின்றது. ஆகவே, இப்பொழுதே அதில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. கொள்ளிடம் அணையில் உடைந்த பகுதியில் மணல் மூட்டையை வைத்து, ஒன்றரை மீட்டர் உயரத்துக்கு தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்தி இருக்கின்றார்கள், அப்படி தடுப்பு ஏற்படுத்தும்பொழுது எல்லா தண்ணீரும் அங்கு சென்று கொண்டு இருக்கும். கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகரில் இருந்தும், கபினி அணையில் இருந்தும் திறக்கப்படும் தண்ணீரின் அளவை இப்போது குறைத்து விட்டார்கள். இப்போது மேட்டூரில் இருந்து வரும் தண்ணீர் 15 ஆயிரம் கனஅடிதான்.

கேள்வி:- மணல் குவாரியினால் தான் இந்த பிரச்சினை என்று சொல்கிறார்களே?

பதில்:- மணல் குவாரிக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? மணல் குவாரியில் மணல் அள்ளுவதற்கு ஒரு வரைமுறை இருக்கின்றது. ஒரு அணை என்றால், அதில் இருந்து எவ்வளவு தூரம் அள்ளவேண்டும் என்ற வரைமுறைக்கு உட்பட்டுத்தான் மணல் அள்ளுவார்களேயொழிய புதிதாக அள்ளுவது கிடையாது.

அனைத்து ஆட்சியிலும் அப்படித்தான் செய்தார்கள், அ.தி.மு.க. ஆட்சியில் மட்டும் தான் என்பது தவறான கருத்து. குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் தான் மணல் அள்ளுவதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, படிப்படியாக இந்த மணலை தடை செய்வதற்கு அரசு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது.

அதனால்தான், வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு, டெண்டர் விடப்பட்டு, இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மணலின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, எம்.சேண்ட் பயன்படுத்த வேண்டுமென்று அரசால் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

கட்டுமான தொழில் செய்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டு, இப்போது கிட்டத்தட்ட 20-லிருந்து 30 சதவீத மக்கள் இன்றைக்கு எம்.சேண்டை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

படிப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, மணல் அள்ளுவது முழுவதும் தடை செய்யப்பட்டு, முழுக்க, முழுக்க எம்.சேண்ட் மூலமாக கட்டுமான பணியை மேற்கொள்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு பொதுமக்களும், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் ஒத்துழைக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment