இந்த நோட்டீசுக்கு எம்.எல்.ஏ. ஜக்கையன் மட்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மற்றவர்கள் தரப்பில் அரசு கொறடா புகாரின் நகலை கேட்டனர்.
இதைதொடர்ந்து, வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபா நாயகர் தனபால் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை கடந்த ஜூன் 23-ந்தேதி பிறப்பித்தனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றும், நீதிபதி எம்.சுந்தர் சபாநாயகர் உத்தரவு செல்லாது என்றும் தீர்ப்பு அளித்தனர்.
நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணனை நியமித்தது.
இதன்படி, நீதிபதி எம்.சத்திய நாராயணன் விசாரித்தார். மொத்தம் 12 நாட்கள் இந்த வழக்கை விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று காலையில் நீதிபதி எம்.சத்தியநாராயணன் பிறப்பித்தார். காலை 10.25 மணிக்கு கோர்ட்டு அறைக்கு வந்த நீதிபதி, சரியாக 10.30 மணிக்கு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.
அதற்கு முன்பாக, மனுதாரர்கள் 18 பேர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமனை பார்த்து, ‘தலைமை நீதிபதி உத்தரவு சரியா?, நீதிபதி எம்.சுந்தர் உத்தரவு சரியா? என்பதற்குள் நான் செல்லவில்லை. என்னுடைய தனிப்பட்ட முறையில் வழக்கை பரிசீலித்து தீர்ப்பை வழங்குகிறேன்’ என்றார்.
தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:-
அரசியலமைப்புச் சட்டத்தில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தங்களை, உள்நோக்கத்துடன் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர். ஆனால், அதற்கான ஆதாரங்கள், ஆதார ஆவணங்கள் எதையும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை.
மேலும், அரசியலமைப்பு சட்டம், 10-வது அட்டவணை, சபாநாயகரின் அதிகாரத்தை கூறுகிறது. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையில், கவர்னர், முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சரவை எந்த ஒரு பங்கும் இல்லை என்று தெளிவாக கூறுகிறது. நபாம் ரிபியா வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘10-வது அட்டவணையில் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது’ என்று கூறியுள்ளார்.
மனுதாரர்களை பொறுத்தவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு, கே.ஏ.செங்கோட்டையனை முதல்-அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், 18 பேரும் கட்சி தாவிவிட்டனர் என்று அர்த்தம் இல்லை என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் கூறுகிறார்.
இதற்காக அவர் எடியூரப்பா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள கருத்தையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். இந்த வாதத்தை ஏற்க முடியாது. ஏன் என்றால், 18 பேரும் மனு கொடுத்த பின்னர், கவர்னர் என்ன செய்திருப்பார்? எப்படி செயல்பட்டு இருப்பார்? என்பதை எல்லாம் இந்த ஐகோர்ட்டு கற்பனையாக ஆய்வு செய்ய முடியாது.
எம்.எல்.ஏ., எஸ்.டி.கே. ஜக்கையன், நேரில் ஆஜராகி அளித்த விளக்கத்தை மட்டும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால், சபாநாயகரின் நடவடிக்கை உள்நோக்கமானது என்று மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், ஜக்கையனிடம் விசாரணை நடத்தியதன் மூலம், 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இருந்து கொண்டு விளக்கம் அளிக்காமல் உள்ளனர் என்பதை உறுதி செய்திருக்கலாம். அதுமட்டுமல்ல, தன்னுடைய கருத்தை ஜக்கையன் திரும்பப் பெற்றுவிட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டை சபாநாயகர் தனியாக பரிசீலித்து இருக்கலாம்.
மேலும், பொதுவாக வழக் கின் தன்மை, சூழ்நிலை, சட்டம், ஏற்கனவே வேறு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் தான், பரிசீலித்து முடிவு எடுக்கப்படுகிறது.
அதனால், எடியூரப்பா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்துக்கள் இந்த வழக்கில் எடுத்துரைக்கப்பட்டன.
எடியூரப்பா வழக்கில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் பல, இந்த வழக்கிற்கு பொருந்துவதாக முதலில் தோன்றினாலும், பின்னர் இந்த வழக்கு மாறுபட்டது என்பது தெளிவாகுகிறது. அதனால், எடியூரப்பா வழக்கு இந்த வழக்கிற்கு எந்த வகையிலும் பயன்தருவதாக இல்லை.
நம்பிக்கை தீர்மானத்தில் தோல்வி அடையும்போது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356-ன் கீழ் மாநில அரசை கலைக்கவேண்டும் என்று ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. ஒருவேளை நம்பிக்கை தீர்மானத்தை கொண்டுவர முதல்- அமைச்சர் மறுக்கும்போது, அந்த தீர்மானத்தை கொண்டு வரும்படி, சட்டசபைக்கு உத்தரவிட்டு, அது தொடர்பான அறிக்கையை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 256-ன் கீழ் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் அதிகாரமும் கவர்னருக்கு உள்ளது என்று நபாம் ரிபியா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
இந்த வழக்கில், தமிழக கவர்னரை சந்தித்து மனுதாரர்கள் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர், இந்த விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இதன்மூலம், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கவர்னரிடம் முறையிட்டுள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. இதன்மூலம் இவர்களது உள்நோக்கம் தெரிகிறது.
இதை நிரூபிக்கும் விதமாக மனுதாரர்களின் ஒருவராக வெற்றிவேல் தன் மனுவில், ‘தமிழக அரசு ஊழல் செய்கிறது என்று வெளிப்படையாக குற்றம் சாட்டிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்- அமைச்சர் பதவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காக, உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் உள்நோக்கத்துடன், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக சபாநாயகர் எங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்துள்ளார்’ என்று கூறியுள்ளார். எனவே, அனைத்து தரப்பு வாதங்களின் அடிப்படையில், மனுதாரர்களின் கோரிக்கை ஏற்க முடியாது.
அரசியலமைப்புச் சட்டத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட சபாநாயகரின் பதவி என்பது எப்போதுமே மரியாதைக்குரியதாகும். அதனால் சபாநாயகர் என்பவர் எப்போதுமே, நடுநிலை தவறாதவராக இருக்க வேண்டும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறார்.
இந்த வழக்கில், சபாநாயகர் ஆரம்பக்கட்ட பிரச்சினை, முக்கிய பிரச்சினைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, தன் முன்புள்ள ஆதார ஆவணங்களின் அடிப்படையில், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சபாநாயகரின் இந்த முடிவில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. இந்த வழக்கில் ஏற்கனவே இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை கருத்தில் கொள்ளாமல், வழக்கின் ஆதார ஆவணங்கள், இருதரப்பு வாதங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு தன்னிச்சையான முடிவுக்கு வந்துள்ளேன்.
சபாநாயகரின் உத்தரவில் உள்நோக்கம் இல்லை. இயற்கை நீதி மீறப்படவில்லை. அவர் நெறிபிறழவில்லை. 18 பேரையும் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறேன்.
ஏற்கனவே, 18 சட்டசபை தொகுதிகளையும் காலியாக அறிவிக்கவும், சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரவும் இந்த ஐகோர்ட்டு தடைவிதித்து இருந்தது. இந்த தடைகள் எல்லாம் நீக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி எம்.சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment