Friday 30 June 2017

பிரதமர் எச்சரிக்கை விடுத்த நாளில் வாலிபர் அடித்துக்கொலை ஜார்க்கண்டில் கலவரம்-தீவைப்பு

ஜார்ஜ்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றவர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவர் பெயர் அலிமுதீன் என்ற அஸ்கார் அன்சாரி ஜார்க்கண்டின் ராம்கார் மாவட்டம் பஜர்தண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர்.

நேற்று மாருதி வேனில் மாட்டிறைச்சி கொண்டு சென்றார். இதை அறிந்து சிலர் அவரை வழிமறித்தனர். 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வாலிபர் அஸ்கர் அன்சாரியை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினார்கள்.

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று கும்பலிடம் இருந்து வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே அவர் மாட்டிறைச்சி ஏற்றி வந்த வேனையும் வன்முறையாளர்கள் கவிழ்த்துப் போட்டு தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் காரணமாக ராம்கார் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டு தீவைப்பு சம்பவங்கள் நடந்தன.

வாலிபர் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை பிடித்து வைத்து விசாரித்து வருகிறார்கள். இதுபற்றி போலீசார் கூறும் போது, அன்சாரி  மாட்டிறைச்சி விற்பனை போன்ற வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.இதில் அவருக்கு சிலருடன் விரோதம் இருந்தது. அவர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டு  உள்ளனர், அவர் மாட்டிறைச்சி கொண்டு சென்றது உறுதிப்படுத்தப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டம் பிரியாபாத் கிராமத்தில் கடந்த திங்கட் கிழமையும் இதுபோல 55 வயது மதிக்கத்தக்கவர் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் நேற்று வாலிபர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் மகாத்மா காந்தியின் சபர்பதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொல்வதை ஏற்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார்.  அதே நாளில் இந்த சம்பவமும் நடைபெற்று உள்ளது குறிப்பிட தக்கது.

No comments:

Post a Comment