நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி ஜூலை மாதம் 1–ந் தேதி அமலுக்கு வருகிறது. தங்க நகைகளுக்கு 3 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சரக்கு, சேவை வரி
நாடு முழுவதும் ஒரே விதமான மறைமுக வரியாக சரக்கு, சேவை வரி ஜூலை மாதம் 1–ந் தேதி அமல்படுத்த முடிவாகி உள்ளது.
இந்த வரி விதிப்பு தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சில், அத்தியாவசிய உணவு தானியங்களுக்கும், பால், தயிர் போன்ற பொருட்களுக்கும் வரிவிலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
அதே நேரம், பல்வேறு பொருட்களுக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 விகிதங்களில் வரி விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், 1,205 பொருட்களுக்கான வரி விதிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
தங்க நகைகளுக்கு 3 சதவீதம் வரி
எஞ்சிய பொருட்களுக்கான வரி விதிப்பை முடிவு செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 15–வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:–
* தங்க நகைகளுக்கு 3 சதவீதமும், கச்சா வைரங்களுக்கு 0.25 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
* பிஸ்கெட்டுகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும்.
* பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.
காலணிகள், பீடி
* ரூ.500–க்கு உட்பட்ட விலையிலான காலணிகளுக்கு 5 சதவீதமும், அதற்கு மேற்பட்ட விலையிலான காலணிகளுக்கு 18 சதவீதமும் சரக்கு, சேவை வரி விதிக்கப்படும்.
* ஆயத்த ஆடைகளுக்கு 12 சதவீதமும், பிற பருத்தி ஜவுளி வகைகளுக்கு 5 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
* பீடிக்கு அதிகபட்ச அளவாக 28 சதவீதம் (செஸ் இன்றி), பீடி இலைக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும்.
* சூரிய மின்சக்தி தகடுகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.
சணலுக்கு வரி விலக்கு
* சணலுக்கு வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
* விவசாய கருவிகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.
* எதிர்ப்பு லாபம் தொடர்பான புகார்கள் குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஜூலை 1–ந் தேதி அமல்
* ஜூலை மாதம் 1–ந் தேதி முதல் சரக்கு, சேவை வரி விதிப்பு முறையை அமல்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒப்புக் கொண்டன.
‘‘தற்போதைய வடிவில் சரக்கு, சேவை வரிவிதிப்பை ஏற்க முடியாது, அதை அமல்படுத்தவும் மாட்டோம்’’ என்று மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி கூறி இருந்த நிலையில் ஜூலை 1–ந் தேதி சரக்கு, சேவை வரியை அமல்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒப்புக் கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. மேற்கு வங்காள மாநில நிதி மந்திரி அமித் மித்ராவும் நேற்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் வரும் 11–ந் தேதி நடைபெறும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார்.
No comments:
Post a Comment