Tuesday, 13 June 2017

நிலத்தடி நீரை பாதிக்கும் தனியார் குடிநீர் நிறுவனம் மீது நடவடிக்கை கிராமமக்கள் கோரிக்கை மனு

திருவாரூர் அருகே உள்ள சிமிழி தலையாலங்காடு கிராமமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம் சிமிழி ஊராட்சிக்குப்பட்ட தலையாலங்காடு கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு ஆழ்குழாய் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான இடங்களில் கைபம்பு அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பருவ மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகின்றது.

நடவடிக்கை

இந்த நிலையில் எங்கள் ஊரில் செயல்பட்டு வரும் தனியார் குடிநீர் நிறுவனம் அனுமதியை தாண்டி அதிக அளவில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிலத்தடி நீரை பாதிக்கும் தனியார் குடிநீர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்று கொண்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறுகையில், கோர்்ட்டு உத்தரவின்படி தனியார் குடிநீர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனால் எந்தவித நடவடிக்கை எடுக்க இயலாது. சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு தட்டுபாடின்றி குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment