Thursday, 22 June 2017

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை டெல்லி பயணம்; ராம்நாத்திற்கு நேரில் ஆதரவு

பாரதீய ஜனதாவால் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துவை நேரில் சந்தித்து தனது ஆதரவினை வழங்குகிறார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக ராம்நாத் கோவிந்துவை பாரதீய ஜனதா அறிவித்துள்ளது.  இதனை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி, ராம்நாத்திற்கு ஆதரவு கோரி வருகிறார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்திற்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி முடிவு செய்வதற்காக சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எம்.எல்.ஏ.க்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, ஆலோசனை கூட்டத்தில், பாரதீய ஜனதாவால் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது என்று கூறினார்.

பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராம்நாத்திற்கு ஆதரவு கோரினார்.  அதனால் அ.தி.மு.க. அம்மா அணி முழு மனதுடன் தனது ஆதரவினை வழங்குகிறது என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.  அங்கு, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத்தினை நேரில் சந்தித்து தனது ஆதரவினை வழங்குகிறார்.

No comments:

Post a Comment