Friday 4 January 2019

திருவாரூர் இடைத்தேர்தல் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 2 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல்


திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடத்தி வருகிறது. இதனால் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் என பெரும் எதிர்ப்பார்ப்பு தொகுதி மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முக்கிய பங்கு வகிப்பதால் அதிகமான சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட களம் இறங்குகின்றனர்.



இந்த நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் ஆகிய 2 இடங்களிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக காலை 8 மணி முதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் 2 அலுவலகங்களில் இருந்தும் 100 மீட்டர் தூரத்திற்கு போலீசார் தடுப்புகள் அமைத்து உரிய சோதனைக்கு பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் போலீசார், வேட்பாளர்களின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து அதன்பின்னரே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதித்தனர். மேலும் வேட்பு மனு தாக்கல் செய்வதை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

முதல் நாளான நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாசிடம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகமலை புதூர் பகுதியை சேர்ந்த அக்னி ஆத்மா கட்சியின் தேசிய தலைவர் அக்னி ஸ்ரீராமச்சந்திரன், சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பத்மராஜன் ஆகிய 2 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இவர்களது வேட்பு மனு தாக்கல் விவரங்கள், உதவி கலெக்டர்் அலுவலக வாசலில் உள்ள விளம்பர பலகைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment