Saturday, 6 May 2017

நீட் பொதுத்தேர்வு நாளை நடைபெறுகிறது: மாணவ மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்


மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் சுமார் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். இதற்காக மொத்தம் 103 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழத்தில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாம், வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா ஆகிய 10 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என 4 பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.

ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதே சமயம் தவறான பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். ஒரே கேள்விக்கு பல பதில்களை அளித்தாலும் அது தவறான பதிலாகவே கருதப்படும்.ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். இட ஒதுக்கீடு பெறும் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதுக்குள் 3 முறையும், பிற மாணவர்கள் 25 வயதுக்குள் 3 முறையும் நீட் தேர்வை எழுத முடியும்.


நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். மாணவர்கள் காலை 7.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு எழுதுவதற்கான அனுமதி அட்டை காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்படும். மாணவர்கள் காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாணவர்கள் தேர்வு அறைக்குள் தேர்வுக்கூட அனுமதி அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அனுமதி அட்டையின் 2-வது பக்கத்தில் ஓட்ட வேண்டிய அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் ஆகியவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். நீலநிறம் அல்லது கருப்பு நிற பால்பாயின்ட் பேனா மூலமே தேர்வு எழுத வேண்டும். பேனா தேர்வுக் கூடத்திலேயே வழங்கப்படும்.நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் ஷூ, முழுக்கை சட்டை, டீ-சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர் கண்ணாடி, செயின், மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ், ஆபரணங்கள், கிளிப்புகள், பெரிய அளவு பட்டன்கள், பேட்ஜ், பெரிய அளவு ரப்பர் பேண்டுகள், சேலை, வளையல், பர்தா, தொப்பி, பைஜாமா, குர்தா ஆகியவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரைக்கை சட்டை, செருப்பு, பேண்ட், ஜீன்ஸ் பேண்ட், மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் கண்ணாடி, லெக்கின்ஸ், சுடிதார், சிறிய அளவு ரப்பர் பேண்ட் ஆகியவற்றை அணிந்து செல்ல அனுமதி உண்டு. திருமணமான பெண்கள் தாலி மற்றும் வளையல் அணிந்து கொள்ளலாம்.செல்போன், கைப்பை, கால்குலேட்டர், கேமரா, பென்டிரைவ், ஹெட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது.முறைகேடுகளை கண்ட றிய தீவிர கண்காணிப்பு நடைபெறும். முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment