Sunday 7 May 2017

ரூ.30 லட்சம் மோசடி புகார்: அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு


திருவாரூர் மாவட்டம் கீழவாழாச்சேரி செட்டித்தோப்பை சேர்ந்தவர் குமார், ரியல் எஸ்டேட் அதிபர். இவர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், சென்னை மயிலாப்பூரில் தனக்கு சொந்தமான வீட்டில் குடியிருப்பவர்கள் காலி செய்ய மறுத்தனர். இதனையடுத்து வக்கீல் ராமகிருஷ்ணன் என்பவர் மூலம் அவரது உறவினரான அமைச்சர் காமராஜை சந்தித்து விவரங்களை தெரிவித்தேன். வீட்டில் குடியிருப்பவர்களை காலிசெய்ய அமைச்சர் காமராஜ் ரூ.30 லட்சம் கேட்டு வாங்கினார். ஆனால் காலி செய்து தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர் என தெரிவித்து இருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் மனு

இந்த மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சென்னை ஐகோர்ட்டில் குமார் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மனுதாரர் விசாரணைக்காக மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ரத்துசெய்து அமைச்சருக்கு எதிரான மனுவை சட்டப்படி நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் குமார் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் கண்டனம்

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 3-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் காமராஜ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

அமைச்சர் என்றால் சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று அர்த்தமா? அவர் சட்டத்துக்கும் மேலானவரா? அவரும் சட்டத்துக்கு உட்பட்டவர் தான். அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு வக்கீல், மனுதாரர் மீது இதுதொடர்பாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அதை ஏற்கமறுத்த நீதிபதிகள், தமிழக அரசு நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகிறது என குற்றம்சாட்டினர்.

மனுதாரரின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த கூடுதல் அறிக்கையை 6-ந் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 8-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ஆஜராக சம்மன்

இதைத்தொடர்ந்து புகார் அளித்த குமாரிடம் முதல்கட்ட விசாரணை நடத்த திருவாரூர் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கீழவாழாச்சேரியில் உள்ள வீட்டில் குமார் இல்லாததால் வீட்டின் சுவரில் சம்மன் ஒட்டப்பட்டது.

அதில், தங்கள் மனு சம்பந்தமாக விசாரிக்க வேண்டியது உள்ளதால் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 5-ந் தேதி காலை 10 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால் விசாரணைக்கு குமார் நேரில் ஆஜராகவில்லை.

அமைச்சர் மீது வழக்குப்பதிவு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் வக்கீல் ராமகிருஷ்ணன், அமைச்சர் காமராஜ் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 420 பிரிவு (மோசடி), 506(1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் வக்கீல் யோகேஷ் கன்னா பிரமாண பத்திரமாக தாக்கல் செய்தார். அதில், அமைச்சர் காமராஜ், அவரது உறவினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் புகார் குறித்து மேலும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. 

No comments:

Post a Comment