Thursday 26 September 2013

’டெபிட் கார்டு’ மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு சேவை வரி வசூலிக்க கூடாது: ரிசர்வ் வங்கி


பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான இடைநிலை பணக் கொள்கை ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டார். இதில், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ‘ரெப்போ ரேட்ஸ்’ எனப்படும் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளாக ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில், ’டெபிட் கார்டு’ மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு சேவை வரி வசூலிக்க கூடாது என்று பாரத ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது. மேலும், பொருட்கள் வாங்குவதற்கான 0 சதவீத வட்டி திட்டத்திற்கு தடை விதித்துள்ளது.

வட்டியில்லா கடன்
டெலிவிஷன், பிரிட்ஜ், வாஷிங்மெஷின், செல்போன்கள் உள்பட பல்வேறு வகையான நுகர்வோர் பொருட்கள் விழாக்காலங்களில் 0 சதவீத வட்டியில் அதாவது வட்டியில்லாமல், சுலப தவணை முறையில் விற்பனை செய்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இதனை அந்த நிறுவனங்களில் முகாமிட்டு இருக்கும் வங்கி ஊழியர்கள் தான் அந்த பொருட்கள் வாங்குவதற்கான தொகையை நுகர்வோர் கடனாக வழங்குவார்கள். வட்டி இல்லை என்று கூறப்பட்டாலும் நடைமுறை கட்டணம் என்று ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுவது வழக்கம்.
ரிசர்வ் வங்கி தடை
ரிசர்வ் வங்கி 0 சதவீத வட்டியில் பொருட்கள் விற்பனை செய்வதை தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வங்கிகள் வட்டி விகிதத்தை திரித்துக் கூற எந்த நடைமுறையையும் கையாளக் கூடாது என்பது விதி. இது ஒரு பொருளின் விலை நிர்ணயத்தின் வெளிப்படைத்தன்மையை இழிவுபடுத்தும் செயலாகும். நுகர்வோருக்கு உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
நடைமுறை கட்டணம்
நேர்மையான நடைமுறைக்கு, செயல்முறை கட்டணம், வட்டி விகிதம் ஆகியவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனை பொருட்படுத்தாதவர்கள் தான் பலவீனமான நுகர்வோர்களை கவர்ச்சியான, சுரண்டுகிற மாதிரியான இந்த திட்டங்களை செயல்படுத்துவார்கள்.
கடன் அட்டைகள் மூலம் 0 சதவீத வட்டியில் சுலப தவணையில் பொருட்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. இதில் வட்டி விகிதம் நுகர்வோரிடம் நடைமுறை கட்டணம் என்ற வகையில் ஏமாற்றி வசூலிக்கப்படுகிறது.
ஒரே வட்டி, ஒரே நடைமுறை
ஒரே பொருளுக்கு பலவித வட்டி விகிதங்கள் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். ஒரே விதமான வட்டியும், ஒரே விதமான நடைமுறையும் பின்பற்றப்பட வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் வாடிக்கையாளர் இடர் விகிதம் பொருந்தாது.
பொருட்களுக்கு தள்ளுபடி இருந்தால் தள்ளுபடியை கழித்த பின்னர் வரும் பொருளின் விலைக்கு தான் கடன் தொகை வழங்க வேண்டும். அல்லது அதற்கு ஏற்ப வட்டியை குறைத்துக்கொள்ள வேண்டும். கடனை திரும்ப செலுத்தும் காலம் அதிகம் இருந்தால் அந்த பயனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அல்லது வட்டியில் இதனை சரி செய்து கொள்ள வேண்டும்.
கடன் அட்டைகளுக்கு
நுகர்வோருக்கு இத்தகைய முழு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த பயன்கள் அனைத்தும் நுகர்வோருக்கு செல்லும் வகையில் கடன்களை வழங்குவதும் வங்கிகளின் பொறுப்பு.
வங்கி கடன் அட்டைகள் (டெபிட் கார்டு) மூலம் பொருட்கள் வாங்குபவர்களிடம் கூடுதல் கட்டணமோ, சேவை கட்டணமோ வசூலிக்கக் கூடாது. வங்கிகளுக்கும்,, வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி இந்த கூடுதல் கட்டணம் வசூலிப்பது நியாயமாகாது, அனுமதிக்க முடியாதது. இதுபோன்ற செயல்கள் அந்த வங்கிகளுடனான உறவை முறித்துவிடும்.

நுகர்வோர் பாதுகாப்புக்காக
உண்மைத்தன்மை, பொருட்களின் வெளிப்படையான விலை ஆகியவை மூலம் நுகர்வோர்களின் குறிப்பாக சில்லறை வர்த்தகத்தில் பலவீனமான நுகர்வோர்களின் உரிமைக்காகவும், நுகர்வோர்களை பாதுகாக்கவும் தான் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளி விற்பனை
ஆனாலும் இந்த நடவடிக்கையால் வர இருக்கும் தீபாவளி, புத்தாண்டு போன்ற விழாக்காலங்களில் இந்த வட்டியில்லா சுலப தவணை திட்ட முறையில் நடைபெறும் விற்பனை பாதிக்கும் என்று வியாபாரிகள் தெரித்துள்ளனர்.
 
 
 

No comments:

Post a Comment