Wednesday, 26 June 2019

தேசியக் கல்விக் கொள்கை- 2019: நீங்கள் அறிந்தே ஆக வேண்டிய பாதகங்கள்!*

*


தேசியக் கல்விக் கொள்கை வரைவு-2019 விரைவில் கொள்கையாக வரவிருக்கிறது. இதன் சாதக பாதகங்கள் குறித்து அலசி ஆராய்ந்து வருகிறார் செயற்பாட்டாளராகவும் சிறுவர்களுக்கான எழுத்தாளராகவும் நன்கு அறியப்படும் விழியன் என்கிற உமாநாத் செல்வன்.

அவர் தொடர்ந்து தேசியக் கல்விக் கொள்கை - 2019 குறித்து தனது கருத்துகளையும், மக்களின் கேள்விகளுக்கு பதில்கள் வடிவில் முக்கிய விஷயங்களையும் எடுத்துரைக்கிறார்.

தேசியக் கல்விக் கொள்கையில் ஏதோ மும்மொழித் திணிப்பு மட்டுமே பிரச்னை என்று அரசியலாக்கப்பட்டு, அது திரும்பப் பெறப்பட்டது வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி எத்தனை எத்தனை பிரச்னைகள் இருக்கின்றன என்பதை எடுத்துரைத்து, ஆழமாக எடுத்துச் சொல்லும் உமாநாத்தின் பொறுப்பு, மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

நிச்சயம் இது ஏதோ கல்வியாளர்களின் பிரச்னை என்று நினைத்தால் தற்போது துவக்கப் பள்ளியில் படிக்கும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் கேள்விக்குறியாகும் என்பதையும் சேர்த்தே அவர் சொல்கிறார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கட்டுரைகள் இனி உங்களுக்காக..

அவரின் பதிவில் இருந்து

அன்புள்ள பெற்றோர்களே !

தேசிய கல்விக் கொள்கை (வரைவு) என்பது எதோ கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்களுக்கான விஷயம் மட்டும் அல்ல. நம் பிள்ளைகளுக்கு மூன்று வயது முதல் கல்லூரி முடித்து ஆராய்ச்சி செய்யும் வரையில் கல்வி எப்படி கொடுக்கப்படும் என்பதற்கான ஒரு கட்டமைப்பு.

சரி, ஒரு பெற்றோராக இதில் எங்கெல்லாம் பாதிக்கப்படுவோம். நமக்கான முக்கிய புள்ளிகள் என்ன?

1. இனி அரசுப் பள்ளிகளைப் போலவே தனியார் பள்ளிகளையும் சரிசமமாக அரசு ஊக்குவிக்கும். தனியார் பள்ளிகளெனில் அவர்கள் பள்ளிக் கட்டணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் நிர்ணயித்துக் கொள்ளலாம் ஆனால் வருடா வருடம் ஏற்றக்கூடாது (சும்மா அவங்களை கட்டுப்படுத்தறாங்கலாம்)

2. நம் குழந்தைகள் பள்ளி முடித்துவிட்டுக் கல்லூரிக்கு இனி எளிதாகச் சென்றுவிட முடியாது. தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கல்லூரிக்குள் நுழைய முடியும்.

3. அரசுப் பள்ளிகளில் குறைவான மாணவர்கள் இருந்தால் அவை மூடப்பட்டு வேறு பள்ளிகளுடன் இணைக்கப்படும். (பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே நீலகிரியில் பத்து பள்ளிகள் மூடப்பட்டு இணைக்கப்பட்டன)

4.மாங்கு மாங்கு என விடியற்காலை எழுந்து டீ, காபி போட்டு படிக்க வைத்த மேல்நிலைச் சான்றிதழுக்கு(+2) இனி எந்தப் பயனும் இல்லை.

5. டியூசன் / கோச்சிங் சென்டருக்கு கட்ட இப்போதே வைப்பு நிதி, லோன் போட்டு வைக்கவும்.

6. கட்டாயம் இனி மூன்று மொழி உண்டு.

7. ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் அறிவியல், கணிதம் ஆகியவை இரண்டு மொழிகளில் கற்றுத்தரப்படும்.

8. சமஸ்கிருதம் கட்டாயம் கற்றுத்தரப்படும். ஆகவே விரைவில் ஒரு மாதத்தில் சமஸ்கிருதப் புத்தகம் வாங்கவும்.

9. பத்து ஆண்டுகளுக்குள் தானாக டிகிரி வழங்காத கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விடும். அந்தக் கல்லூரிகள் நூலக வளாகமாகவோ தொழில் பயிற்சி வளாகமாகவோ மாற்றப்படும் (நீங்க படிச்ச கல்லூரிகளை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுவது நல்லது)

10. தற்சமயம் ஆசிரியர் பணிக்கு ஏராளமான காலியிடம் இருந்தாலும் அரசு பணியிடங்களை நிரப்பவில்லை. இந்தக் கல்விக் கொள்கையின் படி இன்னும் நிறைய ஆசிரியர்கள் தேவை. அப்ப உங்க பிள்ளை படிக்கும் பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் இருப்பாங்க?

11. தமிழ் நாடு அரசு பின்பற்றும் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

12. பத்தாம் வகுப்பு - 12ஆம் வகுப்பு இடைநிற்றல் அதிகம். 12ஆம் வகுப்பு - கல்லூரிகள் இன்னும் அதிகம். நுழைவுத்தேர்வு மூலம் கல்லூரியில் சேரும் Procedureகள் இன்னும் இடைநிற்றலை அதிகரிக்கும்.

13. எட்டாம் வகுப்பு முதலே துணைப்பாடமாக (விருப்பப்பாடம்) தொழில்சார் கல்வி வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவன் கூட இதனால் படிக்கமாட்டான். வேறு மொழியில் கிராமப்புற மாணவனுக்கு எலக்ட்ரிக்கல், நகரப்புற மாணவனுக்கு ரொபோட்டிக்ஸ்.

14. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் தேசிய அளவிலான கற்றல் திறன் வெளிப்பாடு அடிப்படையிலான‌ தேர்வுகள் நடத்தப்படும்.

15. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலைக் கல்வியாக கருதப்பட்டு எட்டு பருவத் தேர்வுகள் வாரியத் தேர்வுகளாக நடத்தப்படும். அரே ஓ சம்போ !

16. தாய்மொழிக்கல்வியே சிறந்தது ஆனால் ஆங்கில வழிக் கல்வி மட்டும் ஊக்குவிக்கப்படும்

17. பள்ளிகளுக்கு இதனைச் செய்வோம் அதனைச் செய்வோம், ஆசிரியர்களுக்கு இதனைச் செய்வோம் அதனைச் செய்வோம்னு ஆயிரத்து நானூத்தி முப்பத்தி எட்டு வாக்குகள். ஆனால் இதற்குத் தேவையான நிதி எங்கிருந்து வரும்னா பெப்பே !

18. 10+2 (5+3+2+2)என்று இருந்த பள்ளிக் கல்வி முறை 5+3+3+4 என்று மாற்றி அமைக்கப்படும்.

19.கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் இனி மாநில அரசுக்கு இல்லை! அதுமட்டுமல்ல, அதன் பாடத்திட்டத்திலும் மாநில அரசு தலையிட முடியாது. அதற்கென்று “பொதுக் கல்விக் குழு” (General Education Council) என்ற ஒன்று நிறுவப்படும்.

20. இது தான் முக்கியமான பாயிண்ட். இன்னும் இன்னும் நிறைய விஷயங்கள் இந்த கல்விக் கொள்கையில் இருக்கு. இதனை சாமான்ய மனிதர்களாகிய நாம் எதுவும் செய்திடவும் முடியாது. கருத்துச் சொல்ல இன்னும் ஒரு வாரமே மீதம் இருக்கு (ஜூன் 30). ஆனால் இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி கல்வி பற்றிய புரிதலை நமக்குள் விதைக்க வேண்டும்.
இது கட்டாயம் நிறைவேறும், அப்படி நிறைவேறினால் மினிமம் டேமேஜிற்கு என்ன செய்ய முடியும் என்றும் பேச வேண்டும்.

மிக முக்கியமாக இது சமமற்ற ஒரு களத்தினை உருவாக்கும் முயற்சி. சிலர் வளர்ந்து நல்ல நிலையில் இருக்கலாம், சிலர் இன்னும் எழக் கூட முடியாமல் இருக்கலாம். இந்தக் கொள்கை சமூகப் பிளவினை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யும். அதற்காகவேனும் கை கேர்க்க வேண்டும்.

வாசிப்போம். விவாதிப்போம். புரிந்துகொள்வோம். ஒன்றாய் கைகோர்த்து பயணிப்போம்

பெற்றோர்கள் சார்பாகவும் ஒருவனாகவும்,
 *விழியன்*
நன்றி   தினமணி

 *இது குறித்து நேற்றைய பதிவை சேர்த்து படிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்*

 *USEFUL information Group*🌹

No comments:

Post a Comment