Saturday, 22 June 2019

திருவாரூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஜூலை 4- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் தகுதியான மகளிருக்கு, அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு மகளிருக்கு மட்டும் பயன்பெற முடியும். பயனாளிகள் இருசக்கர வாகனம் வாங்க, அந்த வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியமாக ரூ. 25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.
125 சிசி-க்கு மேற்படாத திறன் கொண்ட கியர்லெஸ் அல்லது ஆட்டோ கியர் வாகனமாக இருக்க வேண்டும். 1.1.2018 தேதி மற்றும் அதற்கு பின்னர் தயாரிக்கப்பட்ட, புதிய இருசக்கர வாகனமாக இருக்க வேண்டும்.
பயனாளிகளுக்கான தகுதிகள்: அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத நல வாரியங்களில் பதிவு பெற்ற மகளிர், தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணிபுரியும் மகளிர், சுயதொழில் புரியும் பெண்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்களின் கீழ் பணிபுரியும் பெண்கள், ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள மகளிர், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள், மக்கள் கற்றல் மையங்களில் தொகுப்பு ஊதியத்திலோ அல்லது தினக்கூலி அல்லது ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் மகளிர், வங்கிகளில் ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரியும் மகளிர் ஆகியோர் தகுதியுடையவர்கள் ஆவர்.  வயது 18 முதல் 40- க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் நாளில் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ. 2,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரே அக்குடும்பத்தில் பிரதான வருவாய் ஈட்டுபவராக இருக்க வேண்டும். மகளிரை குடும்பத் தலைவியாக கொண்ட மகளிர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளி மகளிர், திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர் மற்றும்  தாழ்த்தப்பட்ட  வகுப்பினர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியுள்ளோர் ஜூலை 4- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.  
விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்: அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்கள், அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள், மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெறலாம்.  ஜூன் 20- ஆம் தேதி காலை 10 மணி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 4- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்: பிறப்பு சான்றிதழ் (வயது 18 முதல் 40 வரை), வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம், இருப்பிட ஆதாரம் ( வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு அல்லது விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்ட தொலைபேசி கட்டண ரசீது, மின் கட்டண ரசீது, வீட்டுவரி ரசீது), வருமானச் சான்று (பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்று, சுய சான்றொப்பமிட்ட சான்று), பணிபுரிவதற்கான ஆதாரம் (பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்று), ஆதார் கார்டு, கல்வித்தகுதி சான்று, 8-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கான சான்று ( மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் முதலியன), பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், முன்னுரிமை கோருவதற்கான சான்று, சாதிச்சான்றிதழ், மாற்றுத் திறனாளி அடையாள அட்டை (தகுதி பெற்ற அலுவலரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்), வாங்க உத்தேசித்திருக்கும் இருசக்கர வாகனத்துக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பெறப்பட்ட விலைப்புள்ளி, விலைப்பட்டியல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
ஜூலை 4- ஆம் தேதிக்கு பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. இதற்கென தொடர்புடைய அலுவலகங்களில் மனுக்கள் வழங்குவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கும் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அலுவலகங்களில் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். தகுதியுள்ள மகளிர் இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment