தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உடனடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே கானூர் என்ற இடத்தில் திருவாரூர் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது நாகையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனா. அப்போது அந்த காரின் பின்புறம் இருந்த பையில் ரூ.50 லட்சம் இருந்தது. அந்த பணம் கொண்டு செல்லப்படுவதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை. இதனால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, திருவாரூர் உதவி கலெக்டர் முருகதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு வந்த அவர்கள், காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் காரில் வந்தவர் நாகையை சேர்ந்த சாகுல் ஹமீது என்பதும், அவருடன் 3 பேர் வந்துள்ளதும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 லட்சம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் அதிகமான பணத்தை எடுத்து செல்வதற்கு அனுமதியில்லை. இந்த நிலையில் கானூர் சோதனை சாவடியில் நடந்த வாகன சோதனையில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.50 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணம் குறித்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் 24 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் ரவுடி பட்டியலில் உள்ள 78 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 12 பறக்கும் படைகள், 12 கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment