Saturday 2 March 2019

எல்லையில் பதற்றம்: நாடாளுமன்ற தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் - தலைமை தேர்தல் கமி‌ஷனர்

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்துடன் முடிவடைய இருப்பதால், அதற்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமி‌ஷனர்கள் அசோக் லாவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் உத்தரபிரதேசம் சென்று, அந்த மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 3 நாட்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
ஆலோசனை முடிந்ததை தொடர்ந்து சுனில் அரோரா லக்னோ நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக, நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சுனில் அரோரா பதில் அளிக்கையில், இது தொடர்பாக மத்திய அரசுடன் தேர்தல் கமி‌ஷன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும், எந்த குழப்பமும் இல்லை என்றும், நாடாளுமன்ற தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என்றும் கூறினார்.
தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது? என்று கேட்டதற்கு, ‘‘உள்துறை அமைச்சகத்துடன் அனைத்து வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம்’’ என்று பதில் அளித்தார்.
சுனில் அரோரா மேலும் கூறியதாவது:–
நாடாளுமன்ற தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதில் தேர்தல் கமி‌ஷன் உறுதியாக இருக்கிறது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தேர்தல் கமி‌ஷனுக்கு தெரிவிக்கலாம். அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும்.
நாடு முழுவதும் அமைக்கப்படும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 331 ஓட்டுச்சாவடிகளிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்யும் எந்திரம் பயன்படுத்தப்படும்.
முதல் தடவையாக இந்த தேர்தலில், வேட்பாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தங்களுக்கும், தங்களுடைய குடும்பத்தாருக்கும் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சொத்து விவரங்கள் பற்றிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்படுகிறது.
அந்த பிரமாண பத்திரத்தில் உள்ள விவரங்களை தேர்தல் கமி‌ஷன், வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கும். அதன்பிறகு அந்த சொத்துகள் விவரம் சரிதானா? என்பது பற்றி ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்த சொத்து விவரங்கள் தேர்தல் கமி‌ஷன் இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment