Thursday 7 March 2019

மக்களவைத் தேர்தல் 2019 தேதி: ஏற்பாடுகள் முடிந்தது; ஓரிரு நாட்களில் அறிவிக்க தேர்தல் ஆணையம் தீவிரம்


மக்களவைத் தேர்தல் 2019  ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடித்துள்ள நிலையில், தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. ஏப்ரல் மே மாதம் 2ம் வாரம் வரை மக்களவைத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தன.

பிரதமர் மோடி நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிடுவதற்காக தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்தநிலையில் எந்தநேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

மக்களவைத் தேர்தலுக்கான வாகன ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வந்தது. ஏற்பாடுகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டன. இதனால் எந்தநேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். அநேகமாக இந்த வார இறுதியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. செவ்வாய் கிழமைக்கு முன்பாக மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு இருக்கும்.

இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

17வது மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை 7 அல்லது 8 கட்டங்களாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இருக்க வாய்ப்புள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடைபெறும் எனத் தெரிகிறது.

எனினும் காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு தற்போதைக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு என தெரிகிறது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும், 10 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment