Sunday 8 July 2018

கொடிக்கால்பாளையம் - பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க ஒரே மென்பொருள் தமிழக அரசு உத்தரவு


பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்புக்கான தலைமைப் பதிவாளர் குழந்தை சாமி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிறப்பு மற்றும் இறப்பு குறித்த பதிவு நடவடிக்கைகளை வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. சி.ஆர்.எஸ். என்ற பொதுவான மென்பொருளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்பதாக வெவ்வேறு வகையான மென்பொருட்களை அந்த துறைகள் பயன்படுத்தி வந்தன.

இணைக்க உத்தரவு

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பதிவில் ஒரே சீரான நிலையை ஏற்படுத்தும் வகையில், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்புக்கான தலைமைப் பதிவாளர் உருவாக்கிய மென்பொருளை 1.10.17 அன்றிலிருந்து அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் நலன் தொடர்பான பணிகளுக்காக பிஐசிஎம்இ 2.0 என்ற மற்றொரு மென்பொருள் செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பிஐசிஎம்இ 2.0 மற்றும் புதிய பொதுவான சி.ஆர்.எஸ். ஆகியவற்றை இணைக்க அரசு உத்தரவிட்டது.

அறிவுரை

இந்த மென்பொருள் மூலம் அளிக்கப்படும் சான்றிதழ்களை, அரசு மற்றும் அரசு அல்லாத பணிகளுக்கு அங்கீகாரம் பெற்ற சான்றாக சட்டரீதியாக பயன்படுத்தலாம். ஏனென்றால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், இணையதளம் மூலமாக மட்டுமே பதிவாளர்களால் வழங்கப்பட முடியும்.

எனவே உங்கள் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் பதிவாளர்களையும், அதற்கான சான்றிதழ்களை புதிய பொதுவான சி.ஆர்.எஸ். என்ற மென்பொருள் மூலமாக வழங்க அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment