Friday, 20 July 2018

மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு



நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், மழைக்கால கூட்டத்தொடராவது சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி, நாட்டு மக்களிடம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன் தினம் (ஜூலை 18) தொடங்கியது. அவை துவங்கிய முதல் நாளே, மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி தெலுங்கு தேசம் கட்சி சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளித்தது. 

தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது, அனைத்து தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தெலுங்குதேசம் கட்சியின் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்பட்ட உடனேயே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுந்து, “பெரிய கட்சியான எங்கள் கட்சியின் நம்பிக்கை இல்லா தீர்மானம்தான் முதலில் அனுமதிக்கப்பட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை சுமித்ரா மகாஜன் நிராகரித்தார். 

தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று (20-ந் தேதி) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாள் முழுவதும் விவாதம் நடத்தப்படும். அதன்பின்னர் ஓட்டெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.
இதையொட்டி இன்று சபையில் கேள்வி நேரம் உள்ளிட்ட பிற எந்த அலுவலும் நடைபெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்து உள்ள நிலையில், முதல் முறையாக நாளை நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தாலும்கூட, அது ஓட்டெடுப்பில் வெற்றி பெறாது என்பதை சபையில் தற்போது உள்ள கட்சிகளின் பலம் தெளிவாக காட்டுகிறது.

535 உறுப்பினர்களைக் கொண்டு உள்ள மக்களவையில் பாரதீய ஜனதா கட்சிக்கு சபாநாயகருடன் சேர்த்து 274 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு 18 எம்.பி.க்கள் இருக்கின்றனர். ஆதரிக்கிற பிற சிறிய கட்சிகளின் உறுப்பினர்களையும் கணக்கில் கொள்கிறபோது பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அரசுக்கு மொத்தம் 313 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

இருப்பினும் நேற்று முன் தினம், சபைக்கு வெளியே டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் “நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற எதிர்க்கட்சிகளுக்கு போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லையே?” என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கு அவர், “எங்களுக்கு போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லை என்று யார் சொன்னது?” என எதிர்க்கேள்வி எழுப்பினார்.

ஆக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து உள்ள எதிர்க்கட்சிகள் தாங்கள் வெற்றி பெறுவோம் என கூறும் வேளையில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசோ நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் ‘சந்திக்கத் தயார்’ என கூறி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஆதரவு இல்லை

மோடி அரசு மீது தெலுங்குதேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்று முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார். நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியும் தேஜகூ-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்று யூகிக்கப்படுகிறது. 

இந்த இரண்டு கட்சிகளும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டாலும், எதிராக வாக்களிக்க வாய்ப்பில்லை எனப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பை இந்த இரு கட்சிகளும் புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான சிவசேனா, நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்து உள்ளது. சிவசேனா கட்சியின் அனைத்து எம்.பிக்களும் இன்று டெல்லியில் இருக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment