கர்நாடகத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியின் பதவி காலம் வருகிற 28–ந் தேதியோடு நிறைவடைகிறது.
இதனைதொடர்ந்து 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 2 தொகுதிகளை தவிர 222 தொகுதிக்கு நடந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி 38 மையங்களிலும் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெற்றது. நேரம் ஆக ஆக, காங்கிரசை முந்திவிட்டு பா.ஜனதா முன்னேறியபடி இருந்தது. 11 மணியளவில் பெரும்பான்மைக்கு தேவையான 111 தொகுதிகளை தாண்டி பா.ஜனதா சுமார் 117 இடங்களில் முன்னிலை பெற்றது.
இதனால் அக்கட்சி தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வெற்றி கொண்டாட்டத்தையும் நடத்தினர். கர்நாடகத்தில் சொந்த பலத்தில் ஆட்சி அமைப்போம் என்றும் அறிவித்தனர். ஆளும் காங்கிரஸ் 70 இடங்களை சுற்றியே இருந்தது. ஆனால் நேரம் ஆக ஆக பா.ஜனதாவின் தொகுதி எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. இது அக்கட்சி தலைவர்களை ஆதங்கமடைய செய்தது. அக்கட்சியின் தனிப்பெரும்பான்மை கனவு தகர்ந்தது. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றியை தனதாக்குகிறது.
முல்பாகல் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர். முல்பாகல் தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் காங்கிரசின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 தொகுதியில் போட்டியிட்ட முதல்–மந்திரி சித்தராமையா தனது சொந்த ஊரான சாமுண்டீஸ்வரியில் சுமார் 36 ஆயிரத்து 42 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே, கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அவசர அவசரமாக அறிவித்தது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், முதல்–மந்திரி பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளது. அதே நேரத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இருதரப்பும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளது. இவ்விவகாரத்தில் ஆளுநர்தான் இறுதிமுடிவு எடுக்கவேண்டும்.
தனிப்பெரும் கட்சியான பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தால், இரு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
No comments:
Post a Comment