Saturday, 26 May 2018

பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் கலெக்டர் தகவல்




திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உடன் இருந்தார். அப்போது ஆழித்தேர் வடிவமைப்பு, ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்ட இரும்பு சக்கரம் மற்றும் தேர் சக்கர முட்டுக்கட்டை வடிவமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து தேரோடும் 4 வீதிகளிலும் தேர் சுற்றி வர தேவையான வசதிகள் உள்ளதா? என்றும், தேருக்கு இடையூறு ஏற்படாமல் மரக்கிளைகள் வெட்டப்பட்டுள்ளதா? என்றும் பார்வையிட்டனர். மேலும் சாலையின் குறுக்கே மின்சார கம்பிகள், தொலைபேசி இணைப்பு கம்பிகள் செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறியதாவது.

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வடம் பிடிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு கூட்டங்கள் நடத்தப்பட்டு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, விழா சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நகராட்சி மூலம் 50 துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேருக்கு முன்னும், பின்னும் வாகனத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தேரோடும் 4 வீதிகளிலும் 7 தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தேரோடும் வீதியில் 2 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மூலம் 3 அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேரோடும் வீதிகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், 2 உதவியாளர்கள் அடங்கிய 4 மருத்துவக்குழுக்களும், தேருக்கு பின்னால் 2 மருத்துவக்குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆழித்தேரோட்டத்திற்கு 1 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டம் சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

No comments:

Post a Comment