Wednesday, 15 March 2017

திருவாரூர் அருகே புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் ஆழ்குழாய் அமைத்து எண்ணெய், கியாஸ் எடுத்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் அதிகமாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. எண்ணெய் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள கீழப்படுகை கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பூமியில் ஆழ்குழாய் அமைத்து பல ஆண்டுகளாக கச்சா எண்ணெய்யை எடுத்து வருகிறது. இந்த இடத்தில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்க திட்டமிட்டு லாரிகள் மூலம் கருவிகள், ரசாயனங்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராமமக்கள் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், கிளை பொறுப்பாளர் சிவக்குமார், ராஜி, அபுசாலி, பாலமுருகன், இளம்பருதி, ராஜா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். அப்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரி படுகையை விட்டு வெளியேற வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

50 பேர் கைது

தகவல் அறிந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதிய பணிகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் எந்தவித புதிய பணிகளும் தொடங்கப்படவில்லை என தெரிவித்தனர். இந்த பிரச்சினையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment