தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16–ந் தேதி தொடங்கி 23–ந் தேதி வரை நடந்தது.
127 மனுக்கள்
இதில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) சார்பில் இ.மதுசூதனன், அ.தி.மு.க. (அம்மா) சார்பில் டி.டி.வி.தினகரன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜனதா சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா, தே.மு.தி.க. சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லோகநாதன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அந்தோணி சேவியர், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டூதயம் ஆகியோர் கட்சிகள் சார்பில் போட்டியிட மனு அளித்தனர்.
இதுதவிர சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 127 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
8 வேட்பாளர்கள் வாபஸ்
கடந்த 24–ந் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இந்த பரிசீலனையில் தேர்தல் ஆணையத்தின் விதிகளை முறையாக பின்பற்றாமல் தாக்கல் செய்யப்பட்ட 45 மனுக்கள் தள்ளுபடி ஆனது. இதில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் மனுவும் அடங்கும். இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 70 பேர் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றனர்.
இந்த நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று, கொளஞ்சி, சண்முகம், கலைவாணன், அக்னி ராமச்சந்திரன், தமிழரசன், லோகநாதன், ஆர்.எஸ்.ராஜேஷ், மன்மதன் ஆகிய 8 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இதைத்தொடர்ந்து போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை 62 ஆக குறைந்தது.
சின்னங்கள் ஒதுக்கீடு
அ.தி.மு.க. 2 அணிகளாக பிரிந்திருப்பதால் அ.தி.மு.க. (அம்மா) வேட்பாளராக போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னமும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா சுயேச்சையாகவே மனுதாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு திராட்சை கொத்து, பேனா, படகு ஆகிய 3 சின்னங்களில் படகு ஒதுக்கப்பட்டது. இதேபோல் மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயாராவதற்கு முன்பு 70 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுமா? அல்லது வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் வேட்பாளர்கள் எண்ணிக்கை 63 வரை இருந்தால் மட்டுமே ஓட்டுப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தமுடியும். அதாவது வாக்குகள் பதிவாகும் கட்டுப்பாட்டு எந்திரம் ஒன்றுடன் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே இணைக்க முடியும்.
ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அதிகபட்சம் 16 வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஆகியவை இடம்பெறும். இவ்வாறு 4 வாக்குப்பதிவு எந்திரங்களும் சேர்த்தால் 64 எண்ணிக்கை வரும். இதில் 63 எண்ணிக்கைகள் வேட்பாளர்களின் பெயர், சின்னங்களுக்கு ஒதுக்கப்படும். ஒரு இடம் நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) ஒதுக்கப்படும்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 8 சுயேச்சை வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக வேட்பாளர்கள்
கடந்த பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா உள்பட 45 பேர் களத்தில் இருந்தனர். தற்போது 17 வேட்பாளர்கள் அதிகரித்து, 62 பேர் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment