ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளதாக நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
முதல்வர் பழனிசாமியை நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
நெடுவாசல் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் வேலு தலைமையில் போராட்டக் குழுவினர் 10 பேர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினர்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேசியதாவது:
''மாநில அரசுகளின் துறைகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை என முதல்வர் கூறினார். விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. ஹைட்ரோ கார்பன் திட்டம் இன்னும் ஆய்வு நிலையில்தான் உள்ளது என்று முதல்வர் கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி கூறியுள்ளார். முதல்வர் உறுதியை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் முதல்வரின் உறுதி குறித்து விளக்கப்படும்.
நல்ல முடிவை அறிவிப்பதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்று மக்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்'' என்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment