Wednesday 4 December 2013

பல கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட ஆசிரியர் பிடிபட்டார்

நாகையில்

பல கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட ஆசிரியர் பிடிபட்டார்

பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு


திருவாரூர், டிச.4-

நாகையில் பல கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட ஆசிரியரை போலீசார் பிடித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆசிரியர்

நாகை மாவட்டம் ஏனங்குடி கேதாரிமங்கலம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் தாவூத்கான் மகன் அக்பர்அலி(வயது34). இவர் ஏனங்குடி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் ஒரு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதில் பணம் கட்டுபவர்களுக்கு இணையதளம் மூலமாக பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும், அந்த பணத்திற்கு அதிக வட்டி தருவதாகவும் கூறி இருந்தார். இதை நம்பி கேதாரிமங்கலம், ஏனங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் பணம் கட்டி இருந்தனர். இந்த நிலையில் பணம் கட்டியவர்களுக்கு அவர் பணத்தை இரட்டிப்பு செய்து கொடுக்கவில்லை, பணத்துக்கான வட்டியும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக அவரிடம் பணம் கொடுத்தவர்கள் கேட்டனர். ஆனால் பணத்தை கொடுக்காமல் அக்பர்அலி தலைமறைவாகி விட்டார். அவர் ஆசிரியராக வேலை பார்த்த பள்ளியில் பாதிக்கப்பட்டவர்கள் விசாரித்தபோது அவர் வேலைக்கும் செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கடத்த முயற்சி

இந்த நிலையில் அக்பர்அலியை நேற்று சிலர் காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி நாகை, திருவாரூர் பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாரூர் நோக்கி வாழவாய்க்கால் அருகே 2 கார்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. அதை சுற்றிவளைத்து பிடித்த போலீசார், காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை தொடர்ந்து போலீசார் அந்த கார்களில் இருந்த அனைவரையும் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

ரூ.45 கோடி மோசடி?

விசாரணையில் அக்பர்அலியை, நாகூர்கனி, காதர்நிஜாமுதீன், முகமதுயூசப், முகமதுநஜீம், பஜ்ருதீன் உள்பட 7 பேர் கடத்தி செல்ல முயன்றதும், அந்த 7 பேரும் அக்பர்அலியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவாரூர் போலீசாரிடம் பிடிபட்ட அக்பர்அலி, நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் இன்று (புதன்கிழமை) ஒப்படைக்கப்படுகிறார். அவர் ரூ.45 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உள்ளனர்.

இந்த நிலையில் பணம் மோசடி செய்ததாக தேடப்பட்ட அக்பர்அலி பிடிபட்டது தொடர்பாக தகவல் கிடைத்ததை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
DAILYTHANTHI DATED 4/12/2013.

No comments:

Post a Comment