Tuesday, 3 December 2013

பருவமழை: தமிழகம் முழுவதும் இன்று மின்வெட்டு இல்லை

பருவமழை காரணமாக தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.3) மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2 வாரங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மின் உற்பத்திக்கும், மின் தேவைக்கும் இடையே இடைவெளியில்லாமல் இருந்தது. எனவே, தமிழகத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமில்லாமல் கிராமப் பகுதிகளிலும் கூட செவ்வாய்க்கிழமை மின்வெட்டு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பருவமழை பெய்யாதது, பராமரிப்புப் பணிகள் மற்றும் போதிய நிலக்கரி இல்லாதது போன்ற காரணங்களால் தமிழகத்தில் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால், நவம்பர் 2-வது வாரத்திலிருந்து சென்னையைத் தவிர பிற இடங்களில் 6 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு இருந்தது. இந்த நிலையில், மின்வெட்டைக் குறைப்பதற்காக சென்னையில் திங்கள்கிழமை (டிச.2) முதல் சுழற்சி முறையில் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்செய்யப்படும் என அறிவித்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவருவதால் மின் பயன்பாடு குறைந்தது. இதனால், கடந்த 2 நாள்களாகவே மின் நிலைமை மேம்பட்டுள்ளது.

சென்னையில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு பல இடங்களில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், செவ்வாய்க்கிழமை மின்வெட்டு செய்ய வேண்டிய அவசியமே எழவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, அவர்கள் மேலும் கூறியது:
மின்வெட்டு இல்லாத நிலைமைக்கு பருவமழையே முக்கிய காரணம். மழை நீடித்தால் மின்வெட்டு இருக்காது.
அதோடு, வல்லூர், வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 4 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி நன்றாக உள்ளது. இந்த யூனிட்டுகளில் மட்டும் 1,350 மெகாவாட் மின்சாரம் செவ்வாய்க்கிழமை உற்பத்தி செய்யப்பட்டது.

இதனால், மின் உற்பத்தி 10 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வடசென்னை இரண்டாவது ஸ்டேஜில் உள்ள 2-வது யூனிட்டில் கிறிஸ்துமஸýக்குப் பிறகு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது உலையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் உற்பத்தி திங்கள்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கினால் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை வெகுவாகக் குறையும் என அவர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment