வக்ஃப் சட்டத் திருத்தம்.
Waqf (Amendment) Bill, 2024.
-----------------
- CMN SALEEM
-----------------
👉 வக்ஃப் வாரியங்களின் அதிகாரங்களை குறைத்து வக்ஃப் சொத்துக்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவது.
👉 வக்ஃப் வாரிய பொறுப்புகளில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமனம் செய்வது.
👉 வக்ஃப் செய்வதிலும் அதற்கான நன்கொடைகளிலும் கட்டுப்பாடுகளை விதிப்பது.
👉 வக்ஃப் சொத்துக்களின் வழக்குகளை கையாளும் தீர்ப்பாயங்களில் (Tribunals) மாற்றங்களை கொண்டு வருவது.
இவை உள்ளிட்ட 44 திருத்தங்களை ஒன்றிய அரசு வக்ஃப் சட்டம் 1995 இல் முன்வைத்துள்ளது.
--------------------
வக்ஃப் சொத்துக்கள் குறித்த
ஒரு சிறிய குறிப்பு
......................................
15 ஆண்டுகளுக்கு முன்பு வக்ஃப் சொத்துக்கள் குறித்து ஒரு சிறிய நூலை எழுதியுள்ளேன். இன்ஷா அல்லாஹ் வக்ஃப் சொத்துக்களின் முழு வரலாற்றையும் விரைவில் எழுத உள்ளேன்.இப்போது ஒரு சிறிய புரிதலுக்காக இதை எழுதியுள்ளேன்.
இவையெல்லாம் வெறுமனே வீதிகளில் ஆவேச குரல் எழுப்பி அடுத்தநாள் மறந்து போய்விடுவதற்கு அல்ல. ஆழமாக வாசிக்கவும் அடுத்த தலைமுறையை பயிற்றுவிக்கவும் தான் எழுதப்படுகிறது.
இந்தியாவிலேயே அதிகமான நிலங்களை கொண்டிருக்கும் அமைப்புகளில் முதலில் இருப்பது இந்திய ராணுவம் இரண்டாவது இந்தியன் இரயில்வே மூன்றாவது இடத்தில் வக்ஃப் வாரியங்கள் இருக்கின்றன.
இந்தியாவில் மொத்தம் 32 வக்ஃப் வாரியங்கள் இயங்குகின்றன. இவற்றுக்கு தலைமையகமாக தேசிய வக்ஃப் கவுன்சில் இயங்குகிறது.
இந்தியாவில் பதிவாகியுள்ள 8.7 இலட்சம் சொத்துக்களில் சுமார் 9.4 இலட்சம் ஏக்கர் நிலங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள 32 வக்ஃப் வாரியங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு பல இலட்சம் கோடிகள்.இந்தியாவின் ஆண்டு பட்ஜெட்டை விட பல மடங்கு கூடுதல்.
இவற்றில் விலைமதிப்புடைய அதிகப்படியான சொத்துக்கள் மத்திய மாநில அரசுகளாலும் அதிகாரமிக்க தனிநபர்களாலும் பன்னாட்டு நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
பெரும்பணக்காரர் முகேஷ் அம்பானியின் வீடு (Antilia) வக்ஃப் சொத்து.அதுவும் ஒரு ஆதரவற்றோர் (எத்தீம்) விடுதிக்கு சொந்தனமானது. அந்த வீட்டில் வைத்து தான் இப்போது பல்லாயிரம் கோடிகள் செலவு செய்து தன் மகனுக்கு ஆடம்பர திருமணம் நடத்தியுள்ளார் அம்பானி.
அதேபோல் ஹைதராபாத்தில் இயங்கும் ISB, Microsoft, Wipro, Lanco போன்ற ஐடி நிறுவனங்கள் அனைத்தும் வக்ஃப் சொத்துக்களில் தான் நிறுவப்பட்டுள்ளன. பெங்களூருவிலுள்ள ITC Windsor என்ற 5 நட்சத்திர ஹோட்டல் வக்ஃப் சொத்தில் தான் கட்டப்பட்டுள்ளன.
தமிழத்தின் நடுவம் திருச்சியின் பழைய நிலப் பதிவேடுகளைத் தோண்டினால் திருச்சியின் பெரும்பகுதி வக்ஃப் சொத்துக்கள் தான். அப்படி திருச்சியின் பழைய ஆவணங்களை தோண்டியதால் ஏற்பட்ட விளைவு தான் இப்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம்.
ஆன்மிக ஞானி நத்ஹர் (ரஹ் )அவர்கள் அடக்கமாகியுள்ள தர்காவுக்கு சொந்தமானதும், அவர்களின் சீடர் குந்தவை நாச்சியார் கொடுத்த நிலத் தானங்களும், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு மதுரை ராணி மங்கம்மா தானமாக கொடுத்த சொத்துக்களிலும் தான் திருச்சி நகரம் அமைந்துள்ளது.
அந்த நிலங்களில் ஒருசில கோவில்களும் இருக்கின்றன அவைதான் நேற்று நாடாளுமன்றத்தில் பேசு பொருளாக இருந்தது.வக்ஃப் சொத்துக்களில் கோவில்கள் தேவாலயங்கள் இருப்பது எதார்த்தமானது தான். வரலாறு அறியாதவர்கள் அல்லது குதர்க்கவாதிகள் மட்டுமே இதை விவகாரமாக்குவார்கள்.
சென்னை,திருச்சி,கோவை,சேலம்,பண்ருட்டி, மதுரை, இராமநாதபுரம் புதுக்கோட்டை என்று தமிழகம் முழுவதும் வக்ஃப் சொத்துக்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டும் சில பராமரிக்கப்பட்டும் வருகின்றன.
தமிழகம் முழுவதும் மூவேந்தர்களும் பாளையக்காரர்களும் தனிப்பட்ட நிலஉடமையாளர்களும் பள்ளிவாசல்களுக்கும் தர்காக்களுக்கும் இன்னும் பிற அறப்பணிகளுக்கும் கொடுத்த நிலத் தானங்கள் ஏராளம் இருக்கின்றன.
1999 இல் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் சேர்மனாக இருந்த மர்ஹூம் அப்துல் லத்தீப் சாஹிப் அவர்கள் தமிழக வக்ஃப் சொத்துக்களின் மதிப்பு இரண்டு இலட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று அன்றைய காலத்திலேயே அதாவது ரியல் எஸ்டேட் என்ற மட்டரகமான தொழில் வளர்ச்சியடையாத காலத்திலேயே கூறினார்.
ஊர் மஹல்லா பள்ளிவாசல்களை மட்டும் பராமரிப்பதிலும் வீம்புக்கு புதிய பள்ளிவாசல்கள் கட்டுவதிலும் இருந்த கவனம் பள்ளிவாசல்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை பாதுகாப்பதிலும் மஹல்லா அல்லாத பொது இடங்களில் தனித்து விடப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து அவற்றை சட்டப்பூர்வமாக பாதுகாப்பதிலும் முஸ்லிம்களுக்கு கவனம் இல்லாமல் போனது.
எல்லாவற்றுக்கும் மேலாக சிவன் சொத்து குல நாசம் என்ற எச்சரிக்கையில் பிற சமூகங்கள் காட்டிய அச்ச உணர்வை கூட சில முஸ்லிம்கள் காட்டவில்லை.
அல்லாஹ்வின் சொத்துக்களை பாதுகாப்பதில் முஸ்லிம் சமூகத்தை முறையாக பயிற்றுவிக்காமல் போனதால் தான் பல இலட்சம் கோடிகள் பெறுமானமுள்ள சொத்துக்கள் இன்று ஆக்கிரமிக்கப்பட்டு அடையாளம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் ஒருமுறை வக்ஃப் செய்யப்பட்டு விட்டால் அந்த சொத்து உலகத்தின் இறுதிநாள் வரை வக்ஃப் சொத்தாகத்தான் இருக்கும்.
முஸ்லிம் பொதுஜனத்திடம் சுயநலமும் அலட்சியமும் மிகைத்திருக்கும் காலத்தில் வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தான் கிடக்கும்.இதனால் முஸ்லிம் சமூகம் அசிங்கப்பட்டு தான் நிற்கும்.
முஸ்லிம்களிடம் விழிப்பு ஏற்பட்டு பொதுநலம் மிகைக்கின்ற காலத்தில் இந்த சொத்துக்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக மீட்கப்பட்டு முஸ்லிம்களிலும் முஸ்லிம் அல்லாதவர்களிலும் தேவையுடைய மக்களின் நலனிற்கு நிச்சயம் பயன்படுத்தப்படும்.
அந்த அழகிய காலத்தை நோக்கி உம்மத்தை நகர்த்துவது தான் ஒரு சமூக ஆர்வலனுடைய முதன்மை கடமை.
No comments:
Post a Comment